வேலூர்:ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.11) நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரயில்வே துறையில் பயிற்சி முடித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுக்குப் பணி வழங்காததைக் கண்டித்து தங்களது வாக்காளர் மற்றும் ஆதார் அட்டையை ஒப்படைத்துத் தேர்தலில் புறக்கணிப்பதாகக் கூறினர்.
தமிழகத்தில் ரயில்வே துறையில் ஆக்ட் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு ஏராளமான இளைஞர்கள் பயிற்சியை முடித்துள்ளனர். இந்த நிலையில், தமிழர்கள் என்பதால் தங்களுக்குப் பணி வழங்காமல் அலைக்கழிப்பதாகவும், உடனடியாகத் தங்களுக்குப் பணி வழங்க வேண்டும் என கூறி இளைஞர்கள் 20க்கும் மேற்பட்டோர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
அப்போது தங்களின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிட்டு நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க உள்ளதாகக் கூறினர். இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.