கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து இன்று (ஆக.6) மேயருக்கான தேர்தல் நடைபெற்றது. திமுக கூட்டணியின் சார்பில் மேயர் வேட்பாளராக 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டிருந்தார். அதன்படி இன்று காலை 10 மணி அளவில் திமுக கூட்டணி கவுன்சிலர்கள் அனைவரும் தேர்தல் நடைபெறும் மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு வந்தனர்.
காலை 10:30 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் துவங்கியது. திமுக கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட ரங்கநாயகி மட்டும் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. பின்னர் கோவை மாநகராட்சி மேயராக போட்டியின்றி ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகியிடம் வழங்கினார். சக கவுன்சிலர்கள் மேயருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
தொடர்ந்து மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி உள்ளிட்டோர் வந்தனர். மேயர் அமைச்சர்கள் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். அதன்பின் அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் கே.என்.நேரு ஆகியோர் ரங்கநாயகியை மேயருக்கான இருக்கையில் அமர வைத்து செங்கோலை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரெங்கநாயகி,"எனக்கு இந்த பதவியை அளித்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, முத்துசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், திமுக மாவட்ட செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இப்போது தான் பொறுப்பு ஏற்றுள்ளேன். எனக்கு எனது வார்டை பற்றி தான் தெரியும். இனி அனைவருடனும் கலந்து ஆலோசித்து எது அவசியம், எது அவசரம் என்பதை கேட்டு செயல்படுவேன்" எனத் தெரிவித்தார்.