கோயம்புத்தூர்: கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி 97 வார்டுகளை கைப்பற்றியது. அதிமுக வெறும் 3 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அப்போது கோவை பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியால் 19 வது வார்டு உறுப்பினர் கல்பனா ஆனந்த் குமாரை மேயராக பரிந்துரை செய்ததன் பேரில் திமுக தலைமை ஒருமனதாக கல்பனாவை வெற்றி பெற செய்தது.
மேயராக பொறுப்பேற்ற கல்பனா அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு பின் திமுக மாமன்ற உறுப்பினர்களிடையேயும், மூத்த அமைச்சர் கே.என்.நேருவுடனும் மோதல் போக்கை கடைபிடித்து வந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களை சொல்லி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து கோவை மாநகராட்சியின் அடுத்த பெண் மேயர் யார் என்பது அனைவரின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் நாளை (ஆகஸ்ட் 6) கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மேயர் சீட் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் முன்னதாக அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, கோவை மேயர் வேட்பாளராக கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ரங்கநாயகி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரத்தில் பேசப்பட்டது.
அதேபோல, கோவை மத்திய மண்டல தலைவராக உள்ள மீனா லோகு, மேற்கு மண்டல தலைவராக உள்ள தெய்வானை தமிழ்மறை ஆகியோர் பெயர்களும் மேயர் வேட்பாளர்கள் லிஸ்டில் வைத்து பேசப்பட்டது.
செந்தில்பாலாஜியால் மேயரான கல்பனா கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், புதிய மேயரும் அதே சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என கவுண்டர் சமுதாயத்தில் இருந்து தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். அதே சமயம் நாயுடு சமுதாயத்தினர் அதிகமாக உள்ளதால் இந்தமுறை மேயர் பதவியை நாயுடு சமுதாயத்துக்கு கொடுக்க வேண்டும் என ஒரு பகுதியினர் தலைமையை வலியுறுத்தினர்.
ஆனால், தலைமையோ மேயராக நியமிக்கப்பட இருப்பவர் எந்த சர்ச்சையிலும் சிக்காமல், அனைவரிடமும் அனுசரித்து மாநகராட்சியை சிறப்பாக வழிநடத்துபவராக இருக்க வேண்டும். அ.தி.மு.கவில் வேலுமணி, பா.ஜ.கவில் அண்ணாமலை ஆகியோர் கோவை மாவட்டத்தை மையமாக வைத்து அரசியல் செய்வதால், அவர்களை எதிர்த்து அரசியல் செய்து 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.கவுக்கு சாதகமான முடிவுகளை கொடுக்கும் வகையில் களப்பணியாற்ற வேண்டும். அதற்கு மேயராக உள்ள பெண் நிர்வாகியின் கணவரும், அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும் என கருதப்பட்டது.
இந்த முறை கவுன்சிலர்களிடையே மேயரை அறிவித்து எந்தப் பிரச்சினையும் வராமல் தேர்தல் நடத்தும் பொறுப்பு அமைச்சர் நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் தான் கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில் கவுண்டர் சமுதாயத்தை சார்ந்த மீனா லோகுவும், முதலியார் சமுகத்தை சார்ந்த தெய்வானை தமிழ்மறையும், ரங்கநாயகியும் இறுதி களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று கோவையில் அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் முத்துசாமி ஆகியோர் கவுன்சிலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் மேயர் வேட்பாளரை தேர்வு செய்தனர். அதன்படி, கோவை மாநகராட்சியின் புதிய மேயர் திமுக வேட்பாளராக 29 வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார். அப்போது, மேயர் பதவி கிடைக்காததால் 46 வது வார்டு கவுன்சிலரும் மத்திய மண்டல தலைவருமான மீனா லோகு அழுதுகொண்டே சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:கலைஞர் நினைவு நாள்; திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்!