'தி இந்து' குழும முன்னாள் ஆசிரியர் நரசிம்மன் ராம் சென்னை: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பேட்டி எடுத்ததற்காக தனியார் தொலைக்காட்சி ஆசிரியரை, பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை இழிவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்டித்து பத்திரிகை ஆசிரியர்கள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 25ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிரபல பத்திரிகைகளின் ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் பங்கெடுத்துப் பேசிய தி இந்து நாளிதழின் முன்னாள் ஆசிரியர் என்.ராம், பத்திரிகை சுதந்திரத்திற்கு கடந்த காலத்தில் எழுந்த சவால்கள் அவற்றை எதிர்கொண்ட விதம் குறித்து தமது அனுபவத்திலிருந்து விவரித்தார். கருணாநிதி, ஜெயலலிதா முதலான தலைவர்கள் பத்திரிகையாளர்களை அணுகிய விதம் குறித்தும், விமர்சனங்களை அவர்கள் எதிர்கொண்ட விதம் குறித்தும் பேசினார்.
தமிழ்நாட்டில் சர்ச்சைக்குரிய பேச்சுக்களின் மூலம் விளம்பரம் தேடிக்கொள்வதே தற்போதை பாஜக தலைவர்களின் நோக்கமாக இருப்பதாக ராம் குற்றம் சாட்டினார். கடந்த காலங்களில் வாஜ்பாய், அத்வானியின் செயல்பாடுகளை ஆபத்தானவர்கள் என விமர்சித்து தலையங்கங்கள் எழுதிய போதிலும், நேரில் பார்த்தால் மரியாதையோடு நடந்து கொள்வார்கள் என கூறினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சமீபத்திய பேச்சு குறித்து பாதிக்கப்பட்ட நபர் நேரடியாக குற்றவியல் வழக்கு தொடர வேண்டும் எனவும் ராம் வலியுறுத்தினார்.
பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குழு (CPJ - Committee to Protect Journalists) தரவுகளின் படி 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் 19 பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை செய்ததற்காக படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இது கடந்த காலத்தை ஒப்பிடுகையில் இரட்டிப்பு எண்ணிக்கை என கூறினார்.
மேலும் 1988ம் ஆண்டில் ராஜிவ் காந்தி ஆட்சிக்காலத்தில் பத்திரிகை செய்திகளை, அவதூறு என கருதி கடுமையான தண்டனை தரும் வகையில் சட்டத்திருத்தம் (defamation bill 1988) கொண்டு வரப்பட்டதை நினைவு கூர்ந்தார் . "அப்போது மூத்த பத்திரிகையாளராக இருந்த ராம்நாத் கோயங்கா மற்றும் அருண் செளரி மற்றும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்டோரும் அனைவரும் அதை எதிர்த்தோம்.
இதில் ஈ-நாடு பத்திரிகையின் உரிமையாளர் ராமோஜி ராவ் தீவிரமாக செயல்பட்டார். ஒரு பெரிய எழுச்சி ஏற்பட்டது. அதன் பின்னர் ராஜிவ் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின், அந்த சட்டத்தை அதனை வாபஸ் வாங்கினர். காங்கிரஸ் அமைச்சரோ அல்லது தலைவரோ பத்திரிக்கையாளர்களை சந்தித்தால் முதல் கேள்வியே டிஃபமேசன் பில்லை ஆதரிக்கிரீர்களா? அல்லது எதிர்க்கிறீர்களா? என்பது தான். நாங்கள் செய்ததில் இது ஒரு தீவிரமான முயற்சி என்றே கூறுவேன். இது அனைத்து இடங்களிலும் நடைமுறைக்கு வரவில்லை.
ஆனால் ஐதராபாத் போன்ற பல இடங்களில் வந்தது. அவர்கள் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என்றால் உடனடியாக செய்தியாளர் சந்திப்பை விட்டு வெளிநடப்பு செய்தோம். அந்த மசோதாவை தோற்கடித்ததில் அதற்கு முக்கிய பங்கு உண்டு. இன்று என்ன செய்ய வேண்டும் என்றால் அண்ணாமலைக்கு விளம்பரம் கொடுக்கக் கூடாது. இது போல அதிகமாக பேசுபவர்களுக்கு ஆக்சிஜன் விளம்பரம் தான். அதனால் அவருக்கு அந்த ஆக்சிஜனை கொடுக்கக் கூடாது. தீவிரவாதிகளிடம் பேட்டி எடுத்தால், அது அவர்களை விளம்பரப்படுத்துவதற்கு சமம் என்று கூறுவர். அண்ணாமலையை விளம்பரப்படுத்தக்கூடாது. அதற்காக நான் அவரை தீவிரவாதி என்று சொல்லவில்லை. அவர் தீவிரமான அரசியல் கருத்துக்களை கொண்டுள்ளவர். அவரின் தீவிர பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்" என நரசிம்மன் ராம் பேசினார்.