சென்னை:சென்னை நந்தம்பாக்கத்தில் Travel & Tourism Fair நிறுவனத்தின் 24வது கண்காட்சியாக 'சுற்றுலாத்துறை கண்காட்சியை’ நடத்துகிறது. தற்போது தொடங்கியுள்ள இந்த கண்காட்சி, தென்னிந்தியாவின் மிகப்பெரிய பிராந்திய பயண வர்த்தக கண்காட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்த கண்காட்சியில் பீகார், ஒடிசா, உத்தரகாண்ட், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, குஜராத், ஜார்க்கண்ட் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட பல மாநில சுற்றுலா வாரியங்களும், தனியார் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா நடத்துநர்களின் குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவத்துடன் பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நேபாளம் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன. இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், அதன் தொடர் முயற்சிகளை முன்னிலைப்படுத்தியும் காட்சிப்படுத்துகிறது.
இந்த கண்காட்சி அரங்கில் 3 நாடுகள் மற்றும் 16 இந்திய மாநிலங்களிலிருந்து சுற்றுலாத்துறையைச் சேர்ந்தவர்கள் 160 அரங்குகளை அமைத்துள்ளனர். கண்காட்சியில் ஒவ்வொரு சுற்றுலா நிறுவனமும், அதன் சுற்றுலா பேக்கேஜ் குறித்து காட்சிப்படுத்துகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள ராமோஜி ஃப்லிம் சிட்டி அரங்கில், சுற்றுலா வர்த்தகத்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து விவரங்களைக் கேட்டுச் செல்கின்றனர்.
இது குறித்து ராமோஜி ஃப்லிம் சிட்டி வர்த்தகப் பிரிவைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் கூறும்போது, "ராமோஜி ஃப்லிம் சிட்டியில் கோடை காலத்தில் வரும் பொதுமக்களை கவரும் வகையில், புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. மேலும், ஃப்லிம் குறித்த படிப்பும் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து நேரடியாக ஃப்லிம் சிட்டிக்கு வந்து செல்வதற்காக எங்களின் நிறுவனத்தின் அமைப்புகளும்” உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், TTFஇன் அமைப்பாளர்களான Fair fest Media Ltd-இன் தலைவர் சஞ்சீவ் அகர்வால் கூறும்போது, "எங்கள்
கூட்டாளர்களின் செயலில் ஆதரவுடனும், பெரிய பங்கேற்புடனும் ஒவ்வொரு ஆண்டும் பயண வர்த்தகத்திற்கான இறுதி நெட்வொர்க்கிங் தளமாக TTF அதன் இருப்பை உறுதிப்படுத்துகிறது.
கண்காட்சியாளர்கள், எங்கள் நிகழ்வின் முதுகெலும்பாக உள்ளனர். இந்த கண்காட்சியானது, வரவிருக்கும் கோடை விடுமுறைக்கான அற்புதமான சலுகைகள் மற்றும் பேக்கேஜ்களைப் பெறவும் வாய்ப்பாக அமையும்” என தெரிவித்தார்.