தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு.. வெறிச்சோடி காணப்பட்ட ராமேஸ்வரம் துறைமுகம்! - Sri Lankan Navy

Katchatheevu festival 2024: ராமேஸ்வரம் மீனவர்கள் இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணித்த காரணத்தால் இன்று (பிப்.23) கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லவில்லை. இதனால் ராமேஸ்வரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

St Anthony's Shrine festival
கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 12:29 PM IST

ராமேஸ்வரம்:கடந்த 4-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் 23 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, காங்கேசன் கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில், காங்கேசன் கடல் பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக கூறி 23 மீனவர்களையும் கைது செய்ததோடு, 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக, அவர்கள் மீதான வழக்கு விசாரணை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நடந்தது. இதில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட 23 மீனவர்களில் 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து, விசைப்படகுகளின் ஓட்டுநர்கள் இரண்டு பேருக்கு தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், 2வது முறையாக எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

இதனை அடுத்து நீதிமன்ற உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 17-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தினால், நாள் ஒன்றுக்கு சுமார் 10 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலைச் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டும் அல்லாது, இந்த ஆண்டு நடைபெறும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்குச் செல்லுவதற்கு மீனவர்கள் தங்கள் படகுகளைக் கொடுக்க இலாது என அறிவித்துவிட்டதால், இலங்கையில் இன்றும் (பிப்.23) நாளையும் (பிப்.24) நடைபெறும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு, இந்தியா தரப்பில் இருந்து பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று ராமேஸ்வரம் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு நேற்று (பிப்.22) தெரிவித்தார்.

மேலும், இலங்கைக் கடற்படையைக் கண்டித்து கடந்த 7 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்த சூழ்நிலையில் நேற்று (பிப்.22) மேலும் ஒரு மீனவருக்கு ஆறு மாதம் சிறு தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

இந்த கூட்டத்தில், நாளை (பிப்.24) முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விசைப்படகு மீனவ சங்கம் அறிவித்துள்ளனர். மேலும், வருடம் தோறும் பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கச்சத்தீவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்குச் செல்ல இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து சுமார் 3500 பேர் கச்சத்தீவு திருவிழாவிற்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில், இலங்கைக் கடற்படையையும் இலங்கை அரசைக் கண்டிக்கும் விதமாக ராமேஸ்வரம் மீனவர்கள் இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணித்த காரணத்தால் இன்று (பிப்.23) கச்சத்தீவு திருவிழாவிற்கு யாரும் செல்லாத சூழலில் ராமேஸ்வரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுவதோடு, பதிவு செய்திருந்த வெளியூர் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:"காடு என்றால் காடுதான்"-குட்டு வைத்த உச்சநீதிமன்றம்: 1996ல் நீலகிரி வழக்கில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details