தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அணியை எப்போது சேர்ப்பீங்க?'.. ஈபிஎஸ்-ஐ நோக்கி தெறித்த கேள்விகள்.. சசிகலாக்கு பச்சை கொடி? - EDAPPADI PALANISWAMI - EDAPPADI PALANISWAMI

AIADMK review meeting: நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அதிமுகவின் கூட்டத்தின்போது அணியை ஒன்றிணைக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமியிடம் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் வெளிப்படையாக கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.

எடப்பாடி பழனிசாமி(கோப்புப்படம்), நிர்வாகிகள்
எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 16, 2024, 9:20 PM IST

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நிர்வாகிகள் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், இன்று ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய தொகுதிகளுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக, ராமநாதபுரம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அந்த கூட்டத்தில் தொடக்கம் முதலே பல்வேறு கோரிக்கைகளும், சலசலப்புகளும் எழுந்தன.

குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் நின்று 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதன் மூலம் ராமநாதபுரத்தில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதும் இல்லாமல், டெபாசிட் இழக்கக் கூடிய சூழல் ஏற்பட்டது.

இதில், அதிமுக நிர்வாகிகளே ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாக்களித்ததால் அதிமுக வேட்பாளரால் வாக்கு பெற முடியாமல் போனது. இந்நிலையில் இன்று நடந்த கூட்டத்தில் நிர்வாகிகளிடம், அதிமுக தொண்டர்களிடம் அதிமுகவிற்கான வாக்குகளை ஏன் பெற முடியவில்லை என்ற கோணத்தில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளில் சிலர், வெளிப்படையாகவே ஒருங்கிணைந்த அதிமுக இருந்தால் மட்டுமே தற்போதைய சூழலில் அதிமுக வெற்றி பெற முடியும் என பேசியுள்ளனர். இதில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலாவை வரும் காலங்களில் இணைத்து அதிமுகவை வலிமைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இதற்கு பதில் அளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்தை எக்காரணத்தைக் கொண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். சசிகலா குறித்து கேட்டபோது, அது குறித்து வரும் காலங்களில் முடிவெடுத்துக் கொள்ளலாம், தற்பொழுது ஏன் தோல்வியடைந்தோம் என்ற காரணத்தை சரி செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

மேலும், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் எந்த மாதிரியான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு வழங்கினார். இந்த ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தொடக்கம் முதல் முடிவு வரை சலசலப்பாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விடாமல் விரட்டிய சிபிசிஐடி.. எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைதான கதையும், வழக்கு பின்னணியும்..

ABOUT THE AUTHOR

...view details