தென்காசி:மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் 1962 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் ராமநதி, கடனா நதி அணை மற்றும் ஜம்மு நதி மேல்மட்ட கால்வாய் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதனை 1974 ஆம் ஆண்டு இந்த அணைகளை தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
ஆனால் ஜம்ப நதி கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது. இந்த ஜம்புநதி கால்வாய் திட்டம் என்பது ராமநதி அணையின் உபரிநீரை ஜம்பு நதியில் அமைந்துள்ள குத்தாலபேரி, நாராயணபேரி அணைக்கட்டுகளுக்குக் கொண்டு வருவது ராமநதி- ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டமாகும். இந்த திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனையடுத்து 2015 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் ரூபாய் 42 கோடி மதிப்பில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். பின்னர் 40-லட்சம் ஆய்வு பணிக்கும் ரூ5-கோடி நிலம் கையகப்படுத்தவும் ஒதுக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவை தொடர்ந்து இத்திட்டம் தாமதப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் கால்வாய் வெட்டும் பணிக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டது. அந்த சமயம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் வெளி மண்டல பாதுகாப்பு பகுதியில் இந்த கால்வாய் செல்வதால் வனத்துறையின் தடையில்லா சான்று பெற்றுத் திட்டத்தைத் தொடருமாறு வனத்துறையினர் இத்திட்டப் பணிகளை நிறுத்திவிட்டனர்.