தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“திமுகவின் உண்மை முகம் சமூக அநீதி”.. வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் ராமதாஸ் விமர்சனம்! - Vanniyar reservation - VANNIYAR RESERVATION

PMK Ramadoss: வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில், பரிந்துரை அளிக்க அவகாசம் முடிந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக உடனடியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 11, 2024, 11:17 AM IST

சென்னை: இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.50 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை அளிக்க, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு முதன்முதலில் வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

அதன்பின், இரு முறை நீட்டிக்கப்பட்ட தலா 6 மாத காலக்கெடுவும் இன்றுடன் நிறைவடைகிறது. ஆனாலும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்த நடவடிக்கையையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 31 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தமிழ்நாடு அரசு நினைத்திருந்தால், அடுத்த இரு வாரங்களில் இடஒதுக்கீடு வழங்கியிருக்கலாம்.

ஆனால், அதன்பின் 9 மாதங்கள் கழித்து, நவம்பர் 17-ஆம் தேதி தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்பின், இரு மாதங்கள் கழித்து, அதாவது, 2023ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று தான் வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, ஆணையம் 3 மாதங்களுக்குள், அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்திருக்க வேண்டும். ஆனால், அதன்பின் இரு முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது, நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவும் இன்றுடன் நிறைவடைந்துவிட்டது. ஒட்டுமொத்தமாக 15 மாதங்களாகியும் ஆணையம் எதையும் செய்யவில்லை, ஆணையம் கேட்ட தரவுகளையே தமிழ்நாடு அரசு தரவில்லை.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு குறித்த தரவுகளை ஆய்வு செய்து, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பது கடினமல்ல. அது ஒரு சில வாரங்களில் முடிவடையக்கூடிய பணி தான். ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு விரும்பவில்லை. சமூகநீதி வேடம் போடும் திமுகவின் உண்மை முகம் சமூக அநீதி தான் என்பதற்கு இதுதான் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை திமுக அரசு அதன் விருப்பம் போல தாமதிக்க முடியாது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையைக் கடந்து போராடித்தான் இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க வேண்டும் என்றால், அதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி தயாராகத்தான் இருக்கிறது. இதை உணர்ந்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தங்கர் பச்சானுக்கு ஜோசியம் பார்த்த கிளி பறிமுதல்.. அன்புமணி ராமதாஸ் கண்டனம்! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details