மதுரை:தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சித் தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், திரைப் பிரபலங்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரச்சாரம் மேற்கொள்ள இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாமக்கல், திருவாரூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு, நேற்றிரவு மதுரையில் உள்ள விடுதியில் தங்கினார். இந்த நிலையில், இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார்.
இதனைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த விடுதி முதல் மதுரையின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் மீனாட்சி அம்மன் கோயில் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மத்திய அமைச்சரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் காலை 9 மணி முதல் 10 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
கோயிலுக்கு வந்த அவருக்கு, கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மனை தரிசனம் மேற்கொள்வதற்கு முன்பாக, அங்குள்ள முக்குறுணி விநாயகரை தரிசனம் செய்துவிட்டு, மீனாட்சி அம்மனையும், சாமியையும் அவர் தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, அங்குள்ள பொற்றாமரை குளத்தின் முன்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். அரை மணி நேர சாமி தரிசனத்திற்குப் பின் ராஜ்நாத் சிங் மதுரை விமான நிலையம் புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க:மதுரை மீனாட்சி திருக்கல்யாண தரிசன டிக்கெட் முன்பதிவு துவக்கம்! - Madurai Chithirai THIRUVIZHA 2024