சென்னை: வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனையில் புதிதாக 9 உடலுறுப்பு அறுவை சிகிச்சை மையங்களை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் , "25 வருடமாக நான் எந்த ஒரு நிறுவனத்தின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. அப்படி நான் கலந்து கொண்டால், ரஜினி அதில் பாட்னராக இருக்கிறார் என்று கூறுவார்கள்.
அதற்காகவே நான் எந்த நிகழ்ச்சிகள், திறப்பு விழாக்களில் கலந்து கொள்வதில்லை. எனது உடல் இசபெல்லா மருத்துவமனை, விஜயா மருத்துவமனை, அப்போலோ மருத்துவமனை, ராமச்சந்திரா மருத்துவமனை என பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளது. அதனால் டாக்டர்கள், செவிலியர்கள் மீது எனக்கு பெரிய மதிப்புண்டு.
மருத்துவத்தால்தான் நான் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். நான் இங்கு வந்து பார்க்கும் போது, பழைய நினைவுகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது. ஏவிஎம் ஸ்டியோவை பார்க்கும்போது, இந்த இடம் மேடு பள்ளமாக இருக்கும். வெளியில் சென்று படப்பிடிப்பு முடித்து விட்டு வந்த பின்னர், இறுதியாக இங்கு படப்பிடிப்பு நடத்துவோம். ஏவிஎம் புரோடெக்ஷன் 'சம்சாரம் அது மின்சாரம்' படம் எடுத்தனர். அதற்காக தனியாக ஒரு வீட்டை கட்டினர். அந்தப் படம் செலவு செய்ததை விட, அதிகமாக வருமானம் பெற்றுத் தந்தது. ராசியான இடத்தில் ஒரு மருத்துவமனை கட்டி இருக்கிறார்கள், மிகப்பெரிய வெற்றி அடையும்.
மருத்துவமனைகளுக்கு நாம் நோயாளிகளை பார்க்கவோ அல்லது நோயாளியாவோ செல்கிறோம். எனக்கு உடல்நிலை சரியில்லாத போது, காவேரி மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் என்னை வந்து பார்த்து பரிசோதனை செய்து, மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸை எதிர்பார்க்காமல் அழைத்துச் சென்றனர்.
பின்னர் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். மருத்துவமனையில் நான் இருந்து போது, ஊழியர்கள் நோயாளிகளை நன்றாக கவனித்தனர். ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேற ஒழுக்கம் முக்கியம். ஒரு மனிதனுக்கு ஒழுக்கும் இல்லை என்றால், வாழ்க்கையில் முன்னேறவே முடியாது.