மதுரை: ரஜினியின் தீவிர பக்தர் ஒருவர் மதுரையில் நடிகர் ரஜினிகாந்த்க்கு கோயில் அமைத்து வழிபட்டு வருகிறார். இந்த நிலையில், ரஜினி தனது தீவிர ரசிகரை குடும்பத்துடன் நேரில் அழைத்து கௌரவித்ததுடன், குடும்பத்தார் அனைவருக்கும் புத்தாடை வழங்கியுள்ளார். தற்போது அந்த புத்தாடையுடன், தான் கட்டிய அருள்மிகு ஸ்ரீரஜினி திருக்கோயிலில் ரஜினியின் சிலை முன்பாக பொங்கல் வைத்து ரசிகர் கொண்டாடி மகிழ்ந்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த துணை ராணுவப்படையின் முன்னாள் வீரர் கார்த்திக், தனது வீட்டிலேயே தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்துக்கு கோயில் கட்டி, உருவ சிலை அமைத்து வழிபட்டு வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் ரஜினியின் பிறந்தநாளன்று, சுமார் 300 கிலோ எடையுள்ள கருங்கல்லால் ஆன புதிய ரஜினி சிலையை பிரதிஷ்டை செய்திருந்தார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி இரண்டாம் தேதி நடிகர் ரஜினிகாந்த், கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தாரை சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்தார். அப்போது, ரஜினிகாந்தை தனது குடும்பத்தாருடன் சந்தித்து 35 நிமிடங்களுக்கும் மேல் தங்களோடு இருந்து நலம் விசாரித்ததுடன், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் புத்தாடை எடுத்துக் கொடுத்திருந்ததாக தெரிவித்தனர்.
தற்போது, ரஜினிகாந்த் எடுத்துக் கொடுத்த புத்தாடைகளோடு தனது ஸ்ரீரஜினி திருக்கோயிலில் ரஜினியின் சிலைக்கு முன்பாக நேற்று பொங்கலிட்டு படையல் செய்தார். ரஜினியின் தீவிரப் பற்றாளர் கார்த்திக், அவரது மனைவி ரோகிணி, மகள் ரேஷ்மா மற்றும் சகோதரர் சங்கர் ஆகியோருடன் பொங்கல் விழாவைச் சிறப்புடன் கொண்டாடினார்.