சென்னை:தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் துவங்கியது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுத் தரப்பில் வழங்கப்பட்ட உரையை வாசிக்காமல் புறக்கணித்ததாகக் கூறப்பட்டது. தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ரவி, 2 நிமிடங்களில் உரையை முடித்துக் கொண்டு அமர்ந்து விட்டார்.
பின்னர் சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்தார். ஏற்கனவே கடந்த ஆண்டும் முதல் கூட்டத்தொடரில் தமிழக அரசின் உரையை ஆளுநர் மாற்றி வாசித்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்த ஆண்டு முழு உரையையுமே புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஆளுநர் மாளிகை தரப்பில் அதற்கு விளக்கம் அளித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, அதில், "அரசிடம் இருந்து ஆளுநர் உரைக்கான வரைவு உரை கடந்த 9ஆம் தேதி கிடைத்தது. அதில் ஏராளமான பத்திகள் தவறானதாகவும் உண்மைக்குப் புறம்பானதாகவும் இருந்தது.
அதனையடுத்து, ஆளுநர் உரைக்கு முன்னும் பின்னும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் எனக் கடந்த காலங்களிலேயே முதலமைச்சர், சபாநாயகருக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். ஆளுநரின் உரையானது அரசின் சாதனைகள், கொள்கைகளைப் பிரதிபலிக்க வேண்டுமே தவிர தவறாகவோ அரசியல் கருத்தாகவோ இருக்கக் கூடாது, ஆகிய ஆலோசனைகளுடன் ஆளுநர் உரையைத் திருப்பி அனுப்பி இருந்தார்.