தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகளுடன் மழை நீர் தேக்கம்..நோயாளிகள் கடும் அவதி! - RAINWATER

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கழிவுகளுடன் மழை நீர் கலந்து முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளதால் நோயாளிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.

திருவள்ளூர் அரசு மருத்துவமனை
திருவள்ளூர் அரசு மருத்துவமனை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2024, 7:36 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கழிவுகளுடன் மழை நீர் கலந்து முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளதால் நோயாளிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர்

திருவள்ளூரில் 190 கோடி மதிப்பில் நவீன வசதியுடன் கட்டப்பட்ட திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தற்போது வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக இதனால் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் பிற்பகல் வரை தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. எனவே, திருவள்ளூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை காரணமாக காய்ச்சல், இருமல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்த போதிலும் மழை நீர் சூழ்ந்திருந்ததால் உள்ளே செல்லாமல் வேதனையுடன் வீட்டு திரும்பி சென்றனர்.

இதையும் படிங்க:ஃபெஞ்சல் புயல்: கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரடி விசிட்; களநிலவரங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

குறிப்பாக மருத்துவமனை வளாகத்தில் உள்ள குழந்தைகள் நலப் பிரிவு, ஸ்கேன் சென்டர் மற்றும் சமையலறை ஆகிய பகுதிகளில் மருத்துவக் கழிவுகளுடன் மழை நீர் சூழ்ந்துள்ளது. முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளதால் நோயாளிகள் ஸ்கேன் எடுப்பதற்காகவும் சமையலறைக்குச் செல்லக்கூடிய மருத்துவ பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் அவதியுறுகின்றனர். இதனால், மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும், உடன் இருக்கும் உறவினர்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மருத்துவமனையில் முறையான மழைநீர் வடிகால், கழிவு நீரை அகற்றும் பணிகள் மேற்கொள்ளாததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு பருவமழை காலத்திலும் இதே நிலை நீடிப்பதாக பொதுமக்கள் குறை கூறுகின்றனர். தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற தற்காலிகமாக மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றுவதும் அதன் பிறகு அதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாலும் மழை காலங்களில் தண்ணீர் தேங்குவது தொடர்கதையாகி வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் இனியும் அலட்சியம் காட்டாமல் முறையான கழிவு நீர் வசதியும், மழைநீர் வடிகாலும் அமைக்க வேண்டும் என பொதுமக்களும் நோயாளிகளின் உறவினர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details