சென்னை:வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் (Cyclone Fengal) இன்று (நவ.30) சனிக்கிழமை நண்பகல் மாமல்லபுரம் - காரைக்காலுக்கு இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், புயல் கரையை கடக்கும் சமயத்தில் தரைக்காற்று 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக நேற்று மாலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, சேலையூர், பெருங்களத்தூர், வண்டலூர், சிட்லபாக்கம், மீனம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை 5 மணி முதல் காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், தாம்பரம் ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது.
மழை நீர் அகற்றும் பணியில் ஊழியர்கள்:
மழை நீர் தேங்கும் இடங்களை ஆய்வு மேற்கொண்டு உடனடியாக தீங்கும் மழை நீரை, அப்புறப்படுத்த தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்பேரில், மழைநீர் தேங்கும் பகுதிகளில் மின் மோட்டார்களை வைத்து மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:புயல் கரையைக் கடக்கும் நேரம் அதிகரிக்க வாய்ப்பு? - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!