தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாம்பன் பாலத்தில் 50 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பரிந்துரை! - RAMESHWARAM PAMBAN BRIDGE

பாம்பன் பாலத்தில் 50 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாம்பன் பாலம் கோப்புப்படம்
பாம்பன் பாலம் கோப்புப்படம் (Etv Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2024, 3:46 PM IST

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் பாம்பன் புதிய கடல் பாலம், இந்திய ரயில்வேயின் பொறியியல் திறமைக்கு சான்றாக உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 1914-ஆம் ஆண்டு ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில், மண்டபத்திலிருந்து பாம்பன் கடலில் ஆங்கிலேயர் ஆட்சியில் ரயில் பாலம் கட்டப்பட்டது.

110 ஆண்டுகளை கடந்த நிலையில், கடல் அரிப்பு, அவ்வப்போது ஏற்படும் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அப்பாலத்தில் ரயில்கள் செல்வது நிறுத்தப்பட்டு, பழைய பாலம் கைவிடப்பட்டது. இந்நிலையில், சுமார் 550 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில் பாலம் கட்ட ரயில்வே அமைச்சகத்தால் முடிவு செய்யப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது.

ஆர்.வி.என்.எல். எனும் 'ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்' என்ற நிறுவனத்தால் புதிய பாம்பன் பாலம் அமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. ஆர்டிஎஸ்ஓ எனப்படும் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிறுவனத்தின் அங்கீகாரத்துடன் பாலத்திற்குரிய அனைத்து தளவாடங்களும் உருவாக்கப்பட்டன.

இதையும் படிங்க:கூடுதல் பெட்டிகளுடன் கிளம்பிய சிலம்பு எக்ஸ்பிரஸ்; தென்காசி ரயில் பயணிகள் வரவேற்பு!

கடலுக்குள் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப்பாலம் என்ற பெருமையைப் பெறும் பாம்பன் ரயில் பாலத்தில் ஏறக்குறைய அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த நவம்பர் 13-14ஆம் தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி, பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் கட்டுமானத்தின் தரம், தாங்கு தூண்களின் நிலைத்தன்மை, கர்டர்களின் வலு ஆகியவை குறித்து முழுவதுமாக ஆய்வு மேற்கொண்டார். நவம்பர் 14-ஆம் தேதி பாம்பன் புதிய பாலத்தில் 80 கி.மீ. வேகத்திலும், மண்டபம்-ராமேஸ்வரம் பகுதிகளில் 90 கி.மீ. வேகத்திலும் ரயிலை இயக்கி வேகப் பரிசோதனையும் மேற்கொண்டார்.

இந்நிலையில் இந்திய ரயில்வே வாரியத்தின் செயலாளருக்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி அனுப்பியுள்ள கடிதத்தில், "ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், பாம்பன் புதிய பாலத்தில் மணிக்கு 50 கி.மீ. வேகத்திலும், மற்ற பகுதிகளில் மணிக்கு 75 கி.மீ. வேகத்திலும் ரயிலை இயக்கலாம்" என பரிந்துரை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

முன்னதாக, கடந்த நவம்பர் 14 ஆம் தேதி புதிய பாம்பன் ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சௌத்ரி முன்னிலையில் 80 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

பழைய ரயில் பாலம் பயன்பாட்டில் இருந்தபோது மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் தான் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Etv Bharat)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details