சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே துறைக்கு ரூ.6,362 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 77 ரயில் நிலையங்களில் சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 4வதாக பெரம்பூரில் ரயில் முனையம் அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே துறை பொதுமேலாளர் ஸ்ரீஆர்என்சிங் தெரிவித்திருந்தார். அதற்கான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் ரயில் முனையம் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
பெரம்பூரில் ரயில் முனையம் அமைக்கப்படுவது தொடர்பாக ரயில் பயணிப்போர் உரிமைகள் தீர்வகத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஏ.வி.எஸ் மாரிமுத்துவை ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் சார்பில் தொடர்பு கொண்டு பேசினோம்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, "பெரம்பூரில் ரயில் முனையம் அமைக்கப்படும் என சொல்லி இருப்பது வெறும் கண்துடைப்பு தான். சதானந்த கௌடா மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோதே ராயபுரம் ரயில் நிலையத்தை சென்னையின் நான்காவது ரயில் முனையமாக மாற்ற வேண்டி பல மனுக்களை கொடுத்திருந்தோம்.
மேலும், ராயபுரத்தில் ரயில் முனையம் அமைவதற்கு போதுமான இடமும் இருக்கிறது. சென்ட்ரலில் இருந்து டெல்லி இயக்குவதற்கும், சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்வதற்கும் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என மனு அளித்திருந்தோம். ரயில்வே அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். ஆனால், அந்த பணி அப்படியே கைவிடப்பட்டது.
ராயபுரம் அல்லது தண்டையார்பேட்டையை 4வது முனையமாக மாற்றலாம் என ரயில்வே துறையினரே தெரிவித்து இருந்தனர். தண்டையார்பேட்டையில் 200 ஏக்கர் வரை இடம் இருப்பதால் அதை பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென தெற்கு ரயில்வே மேலாளர் பெரம்பூரில் நான்காவது முனையம் அமையும் என தெரிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பு கண் துடைப்பு என்றே தெரிகிறது.
தண்டையார்பேட்டை அல்லது ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக்கினால் தான் பொருத்தமாகவும், எந்த இடையூறும் இல்லாமல் இருக்கும். பெரம்பூர் ரயில் நிலையத்தை முனையமாக்கினால் எந்த லாபமும் இல்லை. பெரம்பூர் ஏற்கனவே நெருக்கடியான இடம். அதில், நான்காவது முனையம் அமைப்பது ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை.
பெரம்பூரில் அமைக்கப்படுவதால் காலப்போக்கில் சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில்களை பெரம்பூரிலிருந்து இயக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது தாம்பரம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட ஊர்களில் இருந்து வருபவர்களுக்கு சிரமமானதாக இருக்கும். பெரம்பூர் வரவேண்டும் என்றால் தனி வாகனம் பிடித்து வர வேண்டிய சூழல் இருக்கும். ஆனால், ராயபுரம் அல்லது தண்டையார்பேட்டையில் அமைத்தால் ஒரே ரயிலில் வந்து விடலாம்.