மயிலாடுதுறை: விழுப்புரம், கடலூரில் கனமழை காரணமாக ரயில் பாதைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. எனவே இந்த பகுதிகளின் வழியே சென்னைக்கு வரவேண்டிய தென்மாவட்ட ரயில்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சில ரயில்கள் மாற்றுப்பாதையில் செல்கின்றன. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஃபெஞ்சல் புயல் (Cyclone Fengal) எதிரொலியாகப் பெய்த பலத்த மழையால், விழுப்புரம் மார்க்கத்தில் செல்லும் சில ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. திருச்சியில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் ரயில் மயிலாடுதுறையில் நிறுத்தப்படுவதாக மயிலாடுதுறை ரயில்வே நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள், ரயில் பயணிகள் குழப்பத்தில் உள்ளனர்.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதனைத் தொடர்ந்து பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக, விழுப்புரம் மார்க்கத்தில் செல்லும் சில ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்வேறு ரயில் சேவை மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
மாற்றுப்பாதையில் செல்லும் ரயில்கள்: மயிலாடுதுறையில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு சென்னை சென்ற உழவன், மண்ணை, கம்பன், அந்தியோதயா ரயில்கள் அனைத்தும் காட்பாடி வழியாக சென்னைக்குத் திருப்பி விடப்பட்டன. கன்னியாகுமரி, சென்னை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களும் காட்பாடி வழியாக சென்னைக்கு சென்றன.ராமேஸ்வரத்திலிருந்து அயோத்தியா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரத்தில் இருந்து காட்பாடி வழியாக அயோத்தியா செல்கிறது.