மதுரை: மதுரையில் இருந்து போடி வரை சற்றேறக்குறைய 90 கிலோ மீட்டர் தூரம் ரயில்வே பாதை மின்மயமாக்கப்பட்டுள்ள நிலையில், தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் ஏ.கே.சித்தார்த்தா இன்று ஆய்வு மேற்கொண்டார். மதுரை சந்திப்பில் இருந்து காலை 9.30 மணிக்கு இந்த ஆய்வு தொடங்கியது.
இந்தப் பாதையின் குறுக்கே செல்லும் ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் லெவல் கிராசிங்குகளை அவர் ஆய்வு செய்தார். உசிலம்பட்டி மற்றும் ஆண்டிபட்டி ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வகையான ரயில்வே பணிகள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டார்.
மேலும், மின்மயமாக்கப்பட்ட பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கியதுடன், அவர்களுக்கு வழங்கப்பட்ட பராமரிப்பு கருவிகள் மற்றும் உபகரணங்களும் ஆய்வு செய்யப்பட்டன. போடி ரயில் நிலையத்திற்கு சற்று முன்பாக மின்பாதை கடக்கும் இடத்தில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளும் சரிபார்க்கப்பட்டன. ஆய்வுக்குப் பிறகு ஏசி (எலக்ட்ரிக்) லோகோவுடன் இணைக்கப்பட்ட ரயில் அமைப்பைப் பயன்படுத்தி, வேக சோதனையும் இந்தப் பாதையில் நடத்தப்பட்டது. தேனியிலிருந்து மாலை 05.53 மணிக்கு தொடங்கி, இரவு 07.25 மணிக்கு மதுரை வந்தடைந்தது.
இந்த ஆய்வின்போது, சென்னை ரயில்வே மின்மயமாக்கல் தலைமை திட்ட இயக்குனர் சமீர் திகே, தலைமை மின் விநியோக பொறியாளர் சுந்தரேசன், தலைமை சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளர் சந்தீப்குமார், மதுரை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் செல்வம், மதுரை ரயில்வே மின்மயமாக்கல் துணை தலைமை மின் பொறியாளர் ரோகன், கோட்ட மின் பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:ரயில் நிலையங்களில் பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள்!