மதுரை: நாடாளுமன்றத்தில் நேற்று (ஜூலை 23) மத்திய நிதி அமைச்சர் 2024 - 25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையில், ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விளக்கங்களை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், “தெற்கு ரயில்வேக்கு தமிழக திட்டங்களுக்காக ரூ.6,362 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே எல்லைக்குட்பட்ட கேரள மாநிலத்திற்கு ரயில்வே திட்டங்களுக்காக ரூ.3,011 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.33,467 கோடி மதிப்பீட்டில் 2,587 கிமீ தொலைவிற்கு புதிய ரயில் பாதை அமைப்பதற்கான 22 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதில், மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ஈரோடு - பழனி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு ரூ.100 கோடியும், அருப்புக்கோட்டை வழியாக மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு ரூ.100.10 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் - தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டத்தை கைவிடக் கோரி தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. தமிழகத்தில் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு 2,759 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. ஆனால், மாநில அரசிடமிருந்து 807 ஹெக்டேர் நிலம் மட்டுமே பெறப்பட்டுள்ளது. தேவையான நிலம் இல்லாமல் பல்வேறு ரயில் பாதை திட்டங்கள் கைவிடப்படும் நிலையில் உள்ளன.
அமிர்த பாரத்: அம்பாசமுத்திரம், திண்டுக்கல், காரைக்குடி, கோவில்பட்டி, மதுரை, மணப்பாறை, பழனி, பரமக்குடி, புதுக்கோட்டை, ராஜபாளையம், ராமநாதபுரம், ராமேஸ்வரம், சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, திருச்செந்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் அமிர்த பாரத் ரயில் நிலையங்களாக மேம்படுத்தவும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.