சென்னை:பொறியியல், எம்பிஏ, எம்சி உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவர்களுக்கு வரும் நாட்களில் தாய் மொழி மற்றும் ஆங்கிலத்தில் கேள்வித்தாள் தயார் செய்து அளிக்க வேண்டும் என அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் இன்று (ஏப்.04) அறிவித்துள்ளது.
இது குறித்து அனைத்து பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், கல்லூரியின் முதல்வர்கள் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், “நாட்டிலுள்ள அனைத்து தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும், அந்தந்த மாநில தாய்மொழி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களைத் தயார் செய்ய வேண்டும்.
ஆங்கிலத்தில் மட்டும் கேள்விகள் இடம் பெறுவதால், அதில் புலமை இல்லாத மாணவர்கள் எளிதில் கேள்விகளைப் புரிந்து கொண்டு விடையளிப்பதில் சவால்களைச் சந்திக்கின்றனர். இந்திய மொழிகளில் தேர்வுகளை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நடத்தப்பட வேண்டும்.
பெரும்பாலான மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் புலமை இருப்பதில்லை, எனவே இந்திய மொழிகளில் தேர்வினை நடத்தலாம். மொழி அறிவு மட்டுமின்றி திறனும் தேவைப்படும், தாய் மொழியில் கேள்விகள் இடம் பெறும் போது மாணவர்கள் எளிதில் அனைத்து வினாக்களையும் புரிந்து கொண்டு விடை அளிக்க முடியும்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையிலும், பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றலைத் தடுக்கவும் முடியும். தாய் மொழி கல்வியால் மாணவர்கள் உளவியல் ரீதியாகவும் ஊக்கப்படுத்துவடன், மாணவர்கள் சேர்க்கையையும் அதிகரிக்கும்.
எனவே இனி வரக்கூடிய காலங்களில் அந்தந்த மாநில மொழி மற்றும் ஆங்கிலம் என வினாத்தாள்களில் இரு மொழிகளில் கேள்விகளைத் தயார் செய்ய வேண்டும், அதற்கான ஏற்பாடுகளைக் கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்”, என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தருமபுரியில் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளின் வீட்டிற்கே சென்று வாக்கு சேகரிப்பு தொடக்கம்! - Lok Sabha Election 2024