கோயம்புத்தூர்: தமிழ்நாடு அரசின் போர்க்கால நடவடிக்கையாக பரம்பிக்குளம் அணையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் பருவமழைக்கு முன்பாக நிறைவுபெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநிலங்களும் பயனடையும் வகையில் 1967ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜரால் ஏற்படுத்தப்பட்டது பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம். இதில் மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, திருமூர்த்தி, உப்பாறு ஆகிய 9 அணைகள் உள்ளன.
மேல்நீராறு அணையில் இருந்து தண்ணீர் சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைகள் வழியாக சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து துவங்கும் காண்டூர் கால்வாய் வழியாக ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு வந்து சேர்கிறது. ஆழியாறு மற்றும் திருமூர்த்தி ஆகிய இரு அணைகள் மூலம் 4.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. மேலும் இவ்விரு அணைகளில் இருந்து குடிநீர் தேவைகளுக்கும் தண்ணீர் பெறப்படுகிறது.
இதில், அதிக நீர்த்தேக்க பரப்பளவு கொண்ட பரம்பிக்குளம் அணை மிக பிரதானமானதாக உள்ளது. 230 சதுர கி.மீட்டர் பரப்பளவும், 72 அடி உயரமும் கொண்ட இந்த அணையில், 17.82 (டி.எம்.சி.) மில்லியன் கன அடி தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். போதிய மழைப்பொழிவு இல்லாததால் அணையின் தற்போதைய நீர்மட்டம் 10.5 அடியாகக் குறைந்துள்ளது.
3 மதகுகள் கொண்ட இந்த அணையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளப்பெருக்கால் 1 மதகு சேதமடைந்து பெருமளவு தண்ணீர் விரயமானது. அப்போது, அரசு உடனடியாக நிதி ஒதுக்கி அந்த மதகை சீரமைக்கும் பணியினை மேற்கொண்டது. 50 ஆண்டுகள் கடந்துவிட்ட அணைகளில் முழு பராமரிப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனை ஏற்று, கடந்த 2023 - 2024ஆம் நிதியாண்டில் முன்னுரிமை அடிப்படையில் சில அணைகளை முழுமையாகச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் அறிவித்தார்.