திருநெல்வேலி: புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், “பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் படுகொலை சம்பவம் வேதனைக்குரியது. கூலிப்படையால் படுகொலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை முன் விரோதத்தால் நடந்ததாக காவல்துறை கூறியிருந்தாலும், கூலிப்படை காரணமாகவே அந்தக் கொலை நடந்துள்ளது. அண்மைக் காலத்தில் தொடர்ந்து கூலிப்படையால் கொலைகள் நடந்து வருகிறது.
தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. கூலிப்படையின் வேர் எங்கிருந்து வருகிறது என்று கண்டறிந்து, சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும். கூலிப்படை கலாச்சாரத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கூலிப்படை உருவாகும் இடங்களாக உள்ளது. கொலை குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஆதரவாக அரசியல் அமைப்புகள் செயல்படுவதால் தான் பொதுமக்கள் அச்சப்படும் நிலை உருவாகி வருகிறது. கூலிப்படையினர் யாராக இருந்தாலும் அவர்களை வேரோடு அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
மாஞ்சோலை விவகாரம்:மாஞ்சோலை பகுதியில் வசிக்கும் மக்களுக்கான வசிப்பிடத்தை அங்கேயே ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கின் விசாரணை நாளை வருகிறது. நேரடியாக நான் ஆஜராகி வாதாடுவதற்கான அனுமதி நீதிமன்றத்தில் கேட்கப்பட்டுள்ளது.