சென்னை:அருந்ததியருக்கு 3% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வுரிமையை 2006ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் படி நிலைநாட்டுவது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மனு அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அருந்ததியினருக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீட்டை ரத்துச் செய்ய வேண்டும். மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தென் தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர் இளைஞர்கள் மீது பல்வேறு கொலவெறி தாக்குதல், வட மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு தீண்டாமை கொடுமைகள் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தி இறுதியாக ஆளுநரிடம் மனு அளிப்பதாக இருந்தது.
அதற்கு முதலில் அனுமதி அளித்த காவல்துறை, திடிரென்று அனுமதி மறுத்து தொண்டர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர். தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் ஏறக்குறைய 20 சதவீதம் இருக்கக்கூடிய தென் தமிழகத்தில் உள்ள தேவந்திரகுல வேளாளர்களின் உரிமைய பறிக்கும் வகையில், வட மாவட்டத்தில் உள்ள பறையர் சமுதாய மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் திமுக அரசு கடைப்பிடிக்கும் 3 சதவீதம் உள் ஒதுக்கீடு என்பதை ரத்துச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.
இதையும் படிங்க: "ப்ளீஸ் அந்தமாரி பண்ணாதீங்க" - கையெடுத்து கும்பிட்ட நிக்கி கல்ராணி!
தென் மாவட்டங்களில் சட்ட ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. தென் மாவட்டத்தில் மத்திய அரசினுடைய பாதுகாப்பு துறையினரை பாதுகாப்புக்கு அமர்த்த வேண்டும். அருந்ததியினருக்கான 3 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்றும், மூன்று சதவீதம் தனியாக கொடுத்தால் பரவாயில்லை. ஆனால் இவர்கள் உள் ஒதுக்கீடு செய்வது தான் பிரச்சினை எனத் தெரிவித்தார்.
மேலும், அரசியல் உள் நோக்கத்தோடு இந்த அரசு செயல்படுவதாகவும், மிகப்பெரிய சமூகப் படுகொலையை இந்த ஸ்டாலின் அரசு செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கான பலனை 2026 ஆல் நிச்சயமாக திமுக அனுபவிக்கும். இது குறித்து நிச்சயமாக உச்சநீதிமன்றம் செல்வோம் அவர் தெரிவித்தார்.
மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அங்கேயே வாழவைக்க அனுமதிக்க வேண்டும். அந்நிய முதலீட்டின் மூலமாக துவங்கப்படும் தொழிற்சாலைகளை சென்னையில் மட்டும் மையமாக வைத்துத் தொடங்காமல் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை போன்ற தென் மாவட்டங்களில் பரவலாக தொடங்கிட மாநில அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.
மேலும் தொழிற்சாலைகளின் கட்டுமான பணிகளில் தென் தமிழக மக்களை பயன்படுத்திக் கொண்டு தொழிற்சாலை இயங்குகின்ற பொழுது பிற மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு உயர் பதவிகளில் முன்னுரிமை கொடுப்பது கடினமான மற்றும் மதிப்பு குறைவான பணிகளுக்கு மட்டுமே தென்தமிழக மக்களை பயன்படுத்துகின்ற பிரிவினைப் போக்குகள் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் இதற்கான விதிமுறைகளை மாநில அரசு புதிதாக உருவாக்க வேண்டும்," எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.