தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள புன்னைக்காயல் கிராமத்தில் 15,000க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பஞ்சாயத்தில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இந்நிலையில், இதே ஊரைச் சேர்ந்த சோபியா என்ற பெண் பஞ்சாயத்து தலைவராக பணியாற்றி வருகின்றார்.
கடந்த 5 வருடங்களாக இந்த புன்னைக்காயல் கிராமத்திற்கு தேவையான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளதாக கூறும் இவரை தற்போது புன்னைக்காயல் கிராமத்திலுள்ள ஊர் தலைவர்கள் என்னை முறையாக பணி செய்யவிடாமல் தடுத்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சோபியா கூறுகையில்,"கடந்த வருடம் பெய்த மழை வெள்ளத்தின்போது திமுக சார்பில் யாரும் தங்களை காணவரவில்லை என்று கூறி என்னை ஊர் தலைவர்கள், ஊர்க்காரர்கள் தாக்கினர். இதுகுறித்து பலமுறை ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், புன்னைக்காயல் கிராமத்திற்கு சொந்தமான இளைஞர் உடற்பயிற்சி கழகம் இருக்கும் இடத்தை ஊர் தலைவர்கள் சேர்ந்து விற்பனை செய்ய முயற்சித்தனர், அதை தடுத்த என்னையும் என் குடும்பத்தினரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டனர். மேலும் ஊரின் நன்மை, தீமைகள் எதுவும் எனது குடும்பத்திற்கு கிடையாது என்றும், எனது காருக்கு டிரைவராக யாரும் செல்லக் கூடாது என்றும் தண்டோரா மூலம் ஊரில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வீடியோ காட்சியுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சோபியா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், ஊர் தலைவர்கள் உள்பட 10 பேர் மீது ஆத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.