தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உழவன் செயலியால் அதிகாரிகளுக்கு கூடுதல் பணிச்சுமையா? டிராக்டர்கள் இன்றி தவிக்கும் புதுக்கோட்டை விவசாயிகள்! - Uzhavan app issues - UZHAVAN APP ISSUES

Pudukkottai Farmers Tractor issue: வேளாண்மை பொறியியல் துறை மூலம் உழவு செய்த டிராக்டர்களை வேறு மாவட்டத்திற்கு அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாகவும், புதுக்கோட்டை மாவட்டத்திலேயே டிராக்டர்கள் உழவு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டியும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுக்கோட்டை டிராக்டர், விவசாயிகள்
டிராக்டர், விவசாயிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2024, 3:03 PM IST

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில் மானாவாரி, குளம், கிணறு, ஆழ்குழாய் கிணறு உள்ளிட்ட பாசனத்தை அடிப்படையாகக் கொண்டு, சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் நெல், கடலை, சோளம், உளுந்து, வாழை, கரும்பு, முந்திரி, சிறுதானிய சாகுபடி உள்ளிட்ட பல வகையான விவசாயப் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை விவசாயிகள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

தற்போது, தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டமாகக் கருதப்படும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண்மை பொறியியல் துறைக்கு டிராக்டர், கதிர் அறுவடை இயந்திரம், கடலை கொடி பிடுங்கும் இயந்திரம், தேங்காய் பறிக்கும் இயந்திரம், புல்டோசர், ஜேசிபி என பலவகையான வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உழவு செய்ய, ஒரு ஒன்றியத்துக்கு 3 டிராக்டர்கள் வீதம் 39 டிராக்டர்களை மாநில அரசு வழங்கியுள்ளது. இந்த டிராக்டர்களில் கொக்கி கலப்பை, சட்டிக்கலப்பை, ரொட்டவேட்டர், உளிக்கலப்பை என பல வகையான கலப்பைகளைக் கொண்டு விவசாயிகளின் தேவைக்கேற்ப உழவு செய்து வந்தனர்.

இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, இ - வாடகை மூலம் மணிக்கு ரூ.500 செலுத்தி குறைந்த வாடகையில் டிராக்டர்கள் உழவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது. விவசாயிகள் இந்த டிராக்டர்களை உழவுப் பணிக்கு பயன்படுத்த உழவன் செயலி மூலம் ஆவணங்கள் பதிவு செய்து, முன்பணம் செலுத்தி காத்திருந்தனர்.

தொடர்ந்து, முன்பதிவு செய்ததன் அடிப்படையில், விவசாயிகளுக்கு டிராக்டர்கள் உழவு செய்ய வேளாண்மை பொறியியல் துறை மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு 13 ஒன்றியங்களில் உழவு செய்து வந்த 39 டிராக்டர்களில், ஒன்றியத்திற்கு ஒரு டிராக்டர்கள் வீதம் 13 டிராக்டர் வேறு மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டது. அதனால் ஒன்றியத்திற்கு இரண்டு டிராக்டர் வீதம், மாவட்டத்தில் 26 டிராக்டர்கள் மட்டுமே உழவுப் பணிக்காக உள்ளது.

அதனால் விவசாயிகள் சரியான நேரத்திற்கு உழவு செய்து சாகுபடியை தொடங்க முடியாத நிலை உள்ளது. இந்த டிராக்டர்களால் ஒரு சில விவசாயிகள் மட்டுமே பயன்பெற்றுள்ளனர். டிராக்டர் பற்றாக்குறையால் சில விவசாயிகள் தனியார் டிராக்டர்களைக் கொண்டு அதிக வாடகை கொடுத்து உழவு செய்யத் தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில், மீண்டும் ஒன்றியத்திற்கு ஒரு டிராக்டர் வீதம் மாவட்டத்தில் உள்ள 26 டிராக்டர்களில் 13 டிராக்டர்களை வேறு மாவட்டத்திற்கு அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் டிராக்டர் ரெக்கார்டுகள், ஓட்டுநர் டீசல் உள்ளிட்ட ரெக்கார்டுகளைப் பராமரிப்பது கூடுதல் பணிச்சுமையாக அதிகாரிகள் கருதுவதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதனாலேயே டிராக்டர்களை வேறு மாவட்டத்திற்கு அனுப்ப உள்ளதாகவும், இதனால் சம்பா சாகுபடியைத் தொடங்கும் நேரத்தில் வேளாண்மை பொறியியல் துறை டிராக்டர்களைப் பயன்படுத்தி சரியான நேரத்திற்கு உழவு செய்ய முடியவில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை கொடுத்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தருமபுரியில் தொடரும் சட்டவிரோத கருக்கலைப்பு.. வீட்டின் மாடியில் நர்ஸ் செய்த கொடூர சம்பவம்.. சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details