புதுச்சேரி: புதுச்சேரி அரசின் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். ரூ.12,700 கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
மாணவர்களுக்கான அறிவிப்பு: புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 மூன்றாண்டுகளுக்கு வழங்கப்படும், அரசு மற்றும் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலனி(shoes), புத்தகப்பை இலவசமாக வழங்கப்படும்.
பிராந்திய அளவில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.20,000, ரூ.15,000, ரூ.10,000 என ஊக்கத்தொகை வழங்கப்படும். பாடவாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும், கிராமப்புற மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வை எழுத ஏதுவாக 11-ஆம் வகுப்பு முதலே பயிற்சி வழங்க ஏற்பாடும் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆன்லைனில் ரேஷன் சேவை: குறிப்பாக, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வு விவகாரங்கள் துறை மூலம் நடப்பு நிதியாண்டு முதல் இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல், எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்படும். குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் அனைத்து சேவைகளும் இணைய வழியில் செயல்படும் எனவும் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட பணிகள் பொதுச் சேவை மையம் மூலம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.