தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யானை தாக்கி விவசாயி பலி.. இறந்தவரின் உடலோடு உறவினர்கள் சாலை மறியல்! என்ன நடந்தது? - கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

Farmer killed by elephant: கிருஷ்ணகிரி அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்த விவசாயின் உடலை காவல் துறையிடம் தர மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

யானை தாக்கி விவசாயி பலி நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல்
யானை தாக்கி விவசாயி பலி நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 7:01 PM IST

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கணப்பள்ளி, எப்ரி, மகராஜாகடை, பெரிய சக்கனாவூர், ஏக்கல்நத்தம் ஆகிய வனப்பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக 10 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனிடையே, 10 நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த 2 காட்டு யானைகள் மகராஜாகடை பகுதிக்குள் புகுந்து, அங்குள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

இந்நிலையில், இன்று (ஜன. 29) அதிகாலை மகராஜகடை அருகேயுள்ள பூக்கவுண்டனூரை சேர்ந்த சாம்பசிவம் (வயது 55) என்பவர் தனது தோட்டத்தில் கொள்ளு அறுவடை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் சுற்றி திரிந்த ஒற்றைக் காட்டு யானை திடீரென்று அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அப்பகுதி மக்கள், யானை தாக்கி அவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து காட்டு யானைகளின் நடமாட்டம் உள்ளதாக வனத்துறையினருக்கு பலமுறை தெரிவித்தும் வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என அம்மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனைஅடுத்து, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இறந்த சாம்பசிவத்தின் உடலை மகராஜகடை - கிருஷ்ணகிரி சாலையில் வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, அதிகாரிகளிடம் உடனடியாக காட்டு யானைகளை விரட்ட வேண்டும் மற்றும் இறந்தவருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும், கிருஷ்ணகிரி கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சங்கு மற்றும் கிருஷ்ணகிரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிவலிங்கம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து 2 மணி நேரம் அளவில் காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து, இறந்தவரின் உடலை எடுக்க உறவினர்கள் அனுமதித்தனர். பின்னர் உடலைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்விற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், யானைகளை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். முன்னதாக கடந்த மாதம் மகாராஜாகடை அருகே உள்ள பெரிசக்கனாவூர் கிராமத்தில் விவசாயியை தாக்கி படுகாயம் அடையச் செய்ததும் இதே ஒற்றை காட்டு யானை என அடையாளம் காணப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:மக்களின் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்..அதிகாரிகளுக்கு சேலம் ஆட்சியர் வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details