சென்னை: தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்களுக்கும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநர் செல்வ விநாயகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், "தென்மேற்கு பருவமழை மே மாதம் கடைசி வாரத்திலிருந்து தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், தென்மேற்கு பருவ மழையின்போது ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களைக் காப்பாற்றும் வகையில் மருத்துவமனைகள் தயார் நிலைக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் மற்றும் கனமழை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால், போதுமான எண்ணிக்கையிலான சுகாதாரப் பணியாளர்கள் 24 மணி நேரம் பணியில் இருக்க வேண்டும். ஆம்புலன்ஸ்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவமனையில் அவசர மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் படுக்கைகள் போதுமான அளவில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மழை நீரால் சூழப்பட்டுள்ள தாழ்வான பகுதிகளில் மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க போதுமான அளவிற்கு மருந்துகளைக் கையிருப்பில் வைத்துக்கொள்வதுடன் மருத்துவர் மற்றும் சுகாதாரப் பணியாளர் அடங்கிய குழுவும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மீட்பு முகாம்களிலும் மருத்துவக் குழு இருக்க வேண்டும். கிருமிநாசினிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் முகாம்களில் பயன்படுத்துவதற்குத் தேவையான அளவில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். முகாம்களில் சுகாதாரமான உணவு, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.
24 மணி நேரமும் மின்சாரம் வழங்கும் வகையில் ஜெனரேட்டர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் குளோரினேஷன் செய்யப்பட வேண்டும். ப்ளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தெளிக்க வேண்டும்.
காய்ச்சல், சிறு காயங்கள், தோல் நோய்கள் போன்ற சிறு நோய்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும். குப்பைகள் மற்றும் இறந்த விலங்குகளை உரிய அதிகாரிகள் உடனடியாக பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.
எதிர்பாராதவிதமாக அதிக அளவில் இறப்பு ஏற்பட்டால் உடல்களை அப்புறப்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதிகளில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளுக்கான வழிமுறைகள், மருந்துகள் மற்றும் பொருட்கள் உயரமான இடங்களில் வைக்கப்பட வேண்டும்.
வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் உள்ள கர்ப்பகால தாய்மார்கள் அடையாளம் காணப்பட்டு, பாதிப்பு ஏற்படும் முன்னர் அருகிலுள்ள சுகாதார நிலையங்களில் அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண மையங்களில் நோய் தொற்றுகள் ஏற்படாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கனமழை எதிரொலி: கோபி அருகே குளம் உடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ளநீர்... பொதுமக்கள் அச்சம்