சென்னை: தமிழ்நாட்டில் கர்ப்பிணி தாய்மார்கள் தங்களின் கர்ப்பத்தை தாங்களே பொது சுகாதாரத் துறை இணையதளத்தில் பதிவு செய்து கொள்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பத்தை பதிவு செய்த பின்னர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட மருத்துவமனைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளில் கர்ப்ப கால சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பூசிகளை பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தாய்மார்கள் கர்ப்பமானவுடன் அவர்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் உதவித் தொகையாக 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு அந்த திட்டத்திற்கான நிதி வழங்குவதில் குளறுபடி உள்ளதாக கூறி நிறுத்திவிட்டது. அதனைத் தொடர்ந்து அதில் உள்ள குளறுபடிகள் களையப்பட்டு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி புதிய மகப்பேறு நிதி உதவி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் படி மத்திய அரசிடமிருந்து நிதி உதவி பெறுவதற்கு கர்ப்பமான தாய்மார்களின் விபரங்கள் அனைத்தும் முழுவதும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநர் செல்வ விநாயகம், அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில், “கர்ப்பத்தை சுயமாக பதிவு செய்தல், டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற சுயமாக பதிவு செய்யும் முகாம்கள் வரும் ஜூலை 22ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடைபெற வேண்டும்.
தமிழ்நாட்டில் வருடந்தோறும் 9.5 முதல் 10 இலட்சம் மகப்பேறு தாய்மார்களுக்கு 8.75 முதல் 9.25 லட்சம் வரை குழந்தைகள் பிறக்கின்றன. அனைத்து தாய்மார்களும் பேறு காலத்தில் தாய்சேய் ஒருங்கிணைந்த கண்காணிப்புக்கான PICME இணையதளத்தில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்தவுடன் அவர்களுக்கு தாய்சேய் நல அடையாள எண் (RCH ID) வழங்கப்படுகிறது.
இவ்வாறு பதிவு செய்யும் முறை அந்தந்த பகுதியில் பணிபுரியும் கிராம, நகர சுகாதார செவிலியர் மூலமாக மட்டுமே பதிவு செய்யப்பட்டு வந்தது. தற்போது புதிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ், மகப்பேறு தாய்மார்கள் சுயமாகவே PICME இணையதளத்தில் சென்று தங்களது கர்ப்பத்தினை தாய்மார்களே பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கர்ப்பத்தினை சுயமாக பதிவு செய்யும் முறையினை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுவதற்காக, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கணினி மூலம் இணையதளத்தில் பதிவு செய்வதற்கும், அதிலுள்ள எளிமையான வழிமுறைகளை கற்றுக்கொடுத்து பதிவு செய்வதற்கும் ஏற்பாடுகள் இம்முகாம் நாட்களில் செய்யப்பட்டுள்ளது.
ஊரக, கிராம பகுதிகளிலுள்ள 2 ஆயிரத்து 681 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 27ஆம் தேதி வரை, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்று பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தாய்மார்கள் தங்கள் கைப்பேசி அல்லது கணினி மூலமாகவும் https://picme.tn.gov.in/picme public என்ற இணையதளத்தில் சென்று சுயபதிவு Self registration for RCH ID என்ற கட்டத்தினை அழுத்தி, தாய்மார்களது ஆதார் அட்டை மற்றும் கர்ப்பம் உறுதி செய்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து நிரந்திர தாய் சேய் அடையாள எண் (RCH ID) பெறலாம்.
சுய பதிவு மூலம் பெறப்பட்ட12 இலக்க RCH ID நிரந்தமானது. மீண்டும் கிராம, நகர சுகாதார செவிலியரிடம் பெறத் தேவையில்லை. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் சுயமாக விண்ணப்பம் பதிவு செய்ய வழிமுறைகள் புதிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ், https://picme.tn.gov.in/picme public இணையதளத்தில், சுய விண்ணப்பம் கட்டத்தினை அழுத்தி, தங்களது தாய்சேய் அடையான எண் (RCH ID), 14 தகுதி ஆவணங்களின் சான்றிதழ்களில் ஏதேனும் ஒரு தகுதி சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சுயமாக பதிவு செய்யப்பட்டு, முழுமையான தகவல்கள் உள்ள கர்ப்பிணி தாய்மார்களின் விண்ணப்பம் அப்பகுதி செவிலியர், மருத்துவர் அலுவலரால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்படும். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் உதவி பெற ஏதேனும் ஒரு சான்று பதிவு செய்ய வேண்டும்.
தகுதியான தாய்மார்கள்:பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான குடும்ப அட்டை (Priority Household Ration Card), முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டம், அல்லது பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா பயனாளிகள், தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர், உழவர் பாதுகாப்பு திட்ட பயனாளிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டத்தின் பயனாளிகள், குடும்ப ஆண்டு வருமானம் 8 இலட்சம் ரூபாய்க்கும் கீழ் உள்ளோருக்கான அடையாள அட்டை, தேசிய உணவு பாதுகாப்பு திட்ட குடும்ப அட்டை வைத்திருப்போர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள், இலங்கை அகதிகள், மத்திய மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட வேறு ஏதேனும் திட்டத்திற்கான அடையாள அட்டை உள்ளோர் இத்திட்டத்திற்கு தகுதியான தாய்மார்கள் ஆவர்.
விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட தாய்மார்கள், முறையான காலத்தில், அரசு நிலையங்கள் மற்றும் புதிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் கர்ப்பகால பரிசோதனை, குழந்தை பிறப்பின் பதிவு மற்றும் குழந்தைக்கு கொடுக்கப்பட்ட தடுப்பூசிகள் ஆகியவற்றின் விவரங்களை பிக்மி இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
தற்போதைய டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் முதல் தவணையாக கர்ப்ப காலத்தில் நான்காவது மாதத்தில் 6 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் தவணையாக குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் 6 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் தவணையாக குழந்தை குழந்தை பிறந்த ஒன்பதாவது மாதத்தின் முடிவில் 2 ஆயிரம் ரூபாயும் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டு ஊட்டச்சத்து பெட்டகங்கள் 4 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக என 18 ஆயிரம் ரூபாய் முதல் இரண்டு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நேரிடையாக ஆதார் எண்ணுடன் இணைந்த சேமிப்பு கணக்கிற்கு மட்டுமே செலுத்தப்படும்.
இந்த புதிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்துடன் ஒருங்கிணைந்த பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் படி முதல் குழந்தைக்கு 5 ஆயிரம் ரூபாய் இரண்டு தவணைகளிலும் மற்றும் இரண்டாம் பெண் குழந்தைக்கு 6 ஆயிரம் ஒரே தவணையாகவும் மேற்கண்ட தவணைகளுடன் உள்ளடக்கியே வழங்கப்படுகிறது என்ற விவரத்தினை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் தெரிவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:14 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..சேலம் மாநகராட்சி புதிய ஆணையாளர் யார் தெரியுமா? - tn govt transfer from IAS officers