திருவாரூர்: முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஆலங்காடு கிராம எல்லையில் உள்ள பேரூராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் பல வருடங்களாக கொட்டப்பட்டு வந்தது. தற்போது நகரில் குப்பைகள் அதிகளவில் சேருவதால் இந்த குப்பைக் கிடங்கு போதுமானதாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் குப்பைகள் கொட்டுவற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதியில் அன்றாடம் சேரும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் முத்துப்பேட்டை எல்லை, கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலையோரம் கொட்டி வருகிறது. இதனால் கோவிலூர் ரவுண்டானா முதல் சாலையோரம் வரை குப்பைகள் நிரம்பி கிடக்கின்றன.
இந்நிலையில், அக்குப்பைகளுக்கு ஒரு சிலர் தீயிட்டுச் செல்வதால் அப்பகுதி முழுவதும் கடும் கரும்புகை சூழ்ந்து காணப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவில் புகை சூழ்ந்து வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனம் கொண்டு பல மணிநேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.