தமிழ்நாடு

tamil nadu

நாடாளுமன்றத் தேர்தல்: மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் செய்ததும்..! செய்யத் தவறியதும்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 3:40 PM IST

Updated : Mar 2, 2024, 9:29 PM IST

Madurai MP S.Venkatesan: தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தவறிவிட்டார் என எதிர்க்கட்சிகள் கூறும் நிலையில், தான் அளித்த வாக்குறுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் நிறைவேற்றியுள்ளதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளதை ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின், உங்கள் எம்.பி. செய்ததும் செய்யத் தவறியதும் தொகுப்பில் காணலாம்

Etv Bharat
Etv Bharat

மதுரை: தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களும் ஒவ்வொரு வரலாற்றையும், புகழையும் கொண்டிருக்கும். ஆனால் ஒரு நகரமே வரலாறுகளால் நிறைந்த புகழைக் கொண்டது என்றால் அது மதுரை தான். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரான மதுரை மூதூர் மாநகர், தூங்கா நகர் எனப் பல பெருமைகளை தன்னகத்தே கொண்டது. ஜிகர்தண்டா, கறிதோசை, முள் முருங்கை பூரி என மதுரை வீதி எங்கும் பல உணவு பதார்த்த மனம் வீசுவதைப் போல, ஒவ்வொரு வீதியும் ஒரு வரலாற்றுக் கதையும் கூறும்.

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில், பழமுதிர்சோலை எனப் பல ஆன்மிக தலங்களைக் கொண்ட மதுரை, சமவெளிகளில் மனிதனின் நாகரீகம் துவங்கியது முதல், மன்னர் காலம், சுதந்திரப் போராட்ட காலம், ஜல்லிக்கட்டு போராட்டம் வரை பல வரலாற்று சிறப்புகளையும் கொண்டது. கண்ணகி எரித்ததாகக் கூறப்படுவதும் இந்த மதுரை தான், காந்தியைக் கதர் ஆடை தறிக்க வைத்ததும் இந்த மதுரை தான், கீழடி மூலம் தமிழர் பெருமையை உலகறியச் செய்ததும் இந்த மதுரை தான்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

தொகுதி நிலவரம்: 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நெடும் வரலாற்றைக் கொண்ட இந்த பழம்பெரும் நகரான இந்த மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் 15 லட்சத்து 76 ஆயிரத்து 745 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 381 பேர் ஆண்கள், 8 லட்சத்து 2 ஆயிரத்து 176 பேர் பெண்கள், 188 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். மதுரை நாடாளுமன்றத் தொகுதி மேலூர், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை தெற்கு, மதுரை வடக்கு மற்றும் மதுரை மத்தி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

தமிழ்நாட்டை பெரும்பாலும் திராவிட கட்சிகளே ஆண்டிருந்த போதிலும், 32-ஆவது நாடாளுமன்றத் தொகுதியான மதுரையை பெரும்பாலும் தேசியக் கட்சிகளே கைப்பற்றியுள்ளது. 15-ஆவது மக்களவைத் தேர்தலில் வென்ற திமுகவின் அழகிரி மற்றும் 16ஆவது மக்களவைத் தேர்தலில் வென்ற அதிமுகவின் கோபாலகிருஷ்ணனைத் தவிர, மதுரை தொகுதியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஜனதா உள்ளிட்ட தேசியக் கட்சிகளே பலமுறை வென்றுள்ளன. இடையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இந்தத் தொகுதியைக் கைப்பற்றியிருந்தது.

மாரியம்மன் தெப்பக்குளம்

எழுத்தாளர் டூ எம்பி:மதுரை தொகுதியின் 17வது நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசன் எழுத்தாளராக அறியப்படுபவர். இவர் எழுதிய 'காவல் கோட்டம்' புத்தகத்திற்கு 2011ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்ட பின்னர் வெகுஜன மக்களுக்கு அறிமுகமானார். கல்லூரிக் காலத்திலிருந்தே மார்க்சிய சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்ததால், மிக எளிதாக சிபிஎம் கட்சியால் ஈர்க்கப்பட்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். சிபிஎம் கட்சியின் இதழான செம்மலர் பத்திரிகையில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

மதுரை மாவட்டம் உத்தப்புரம் தீண்டாமைச்சுவர் போராட்டத்தில் தனது பங்களிப்பின் மூலம் சு.வெங்கடேசன் அரசியல் களத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். அதோடு, கீழடி அகழாய்வில் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து அதற்காக இடைவிடாத போராட்டங்களை மேற்கொண்டார். இதுபோன்ற தொடர் போராட்டங்கள் கட்சியில் அவருக்கான இருப்பை உணர்த்தத் தொடங்கின.

1996, 2001 ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார். 2006ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இந்நிலையில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 17ஆவது மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் வி.வி.ஆர்.ராஜ் சத்யனை விட 1 லட்சத்து 39 ஆயிரத்து 395 வாக்குகள் கூடுதலாக பெற்று சு.வெங்கடேசன் மக்களவை உறுப்பினரானார்.

சாதாரண எழுத்தாளரான அவர், நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகள் மூலம் மத்திய ஆட்சியாளர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் அசாதாரண ஆளாக மாறினார். ஆனால் எம்பி சு.வெங்கடேசனை நாடாளுமன்ற விவாதத்தில் மட்டுமே பார்த்து மெச்ச முடியும், தொகுதி வளர்ச்சி திட்டங்களில் அவரது வாக்குறுதிகள் எல்லாம் வாய்ச்சொல்லாகவே போய்விட்டது என குமுறுகின்றனர் மதுரை தொகுதி மக்கள்.

தந்தையின் திருமண மண்டபத்தின் மூலம் வரும் வருமானமும், கட்சியின் மூலம் கிடைக்கும் ஊதியமுமே இவரது பொருளாதார பின்னணியாக உள்ளது. எழுத்தைத் தவிர வேறு தொழில் இல்லாத இவரது மனைவியும் குடும்பத் தலைவியே. கறைபடியாத கைக்காரர் என ஒரு சாரார் பெருமிதம் கொண்டாலும்; காரியம் சாதித்த காய்ப்பும் அவர் கையில் இல்லையே எனவும் ஒரு சாரார் சாடுகின்றனர்.

விளக்குத்தூண்

வாக்குறுதிகள்: கடந்த தேர்தலின்போது 'வரலாறு-வளர்ச்சி-நவீனம்' என்ற தலைப்பில், மதுரை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், பாரம்பரியப் பெருமைக்குரிய மதுரையை உலக அளவில் கொண்டு செல்வது, கீழடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் புதைந்து கிடக்கும் வரலாற்று ஆதாரங்களை வெளிப்படுத்தல், அதனை முறையாகக் காட்சிப்படுத்துதல், மதுரையை உலக சுற்றுலா நகரமாக மாற்றுதல், மகாத்மா காந்தி அரையாடை அணிந்ததற்கான நினைவுச் சின்னத்தை மதுரையில் உருவாக்குதல், மெட்ரோ ரயில், மதுரை - தூத்துக்குடி தொழில் வழிச்சாலை உருவாக்குதல், விமான நிலைய விரிவாக்கம், ரப்பர் தொழில் பூங்கா அமைத்தல், பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்துதல், வைகையைப் பாதுகாத்தல் என 44 உறுதிமொழிகளை அளித்திருந்தார்.

மதுரை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பெருமளவில் விவசாயம் நடைபெறுகிறது. நகர் பகுதிகளில் மக்கள் சிறுசிறு வியாபாரம் மேற்கொள்கின்றனர். இவை தவிர்த்து மதுரைக்கான தொழில் வளம் என்பது பெரிதளவில் இல்லாதது, படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காகப் பிற மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இடம்பெயர வேண்டிய சூழலை உருவாக்குகிறது. டி.வி.எஸ், ஃபென்னர் என விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய தொழிற்சாலைகளும், ஹெச்சிஎல்(HCL) போன்ற சில ஐடி நிறுவனங்களுமே மதுரையில் உள்ளன. இதனால் பெரிய நகரமான மதுரை தமிழக பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்க முடியாத நிலையில் தான் உள்ளது.

காந்தி மியூசியம்

சதுரங்க வேட்டை படத்தின் நிஜ ஹீரோ: 18ஆவது மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் வேட்பாளராகக் களமிறங்க உள்ளதாக கூறப்படும் அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் மருத்துவர் சரவணன் கூறுகையில், "முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கடந்த தேர்தலில் வாக்குறுதி அளித்தார். அண்மையில் மதுரை மாவட்டம் மேலூரில் விவசாயிகள் ஒருபோக விவசாயத்திற்குக் கூட தண்ணீர் வரவில்லை என்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராடியபோது, அதில் அவர் கலந்து கொள்ளவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடைகளுக்கான செலவு விவகாரத்தில்கூட அண்மையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. திரையுலக பிரபலங்களுக்காக கீழடி அருங்காட்சியகத்தில் தனது நேரத்தைச் செலவிடுகிறார். தெப்பக்குளத்தில் நிரந்தரமாக நீர் தேக்குவதற்கான திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தனது திட்டமாக வெங்கடேசன் சொல்வது எந்தவிதத்தில் நேர்மையானது?

கிருதுமால் நதியை மீட்பேன் என்று அவர் கொடுத்த வாக்குறுதி என்னவானது? இப்போதும் கிருதுமால் நதி சாக்கடையாகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. பாதாளச் சாக்கடைத் திட்டம், மாநகரின் கட்டமைப்பு மேம்பாடு போன்ற வாக்குறுதிகளெல்லாம் கொடுத்துள்ளார். விமான நிலைய விரிவாக்கப் பணிகள் கொஞ்சம் கூட நடைபெறவில்லை. அதேபோன்று நிறையத் தொழில்களைக் கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். கடந்த 5 ஆண்டு காலத்தில் என்னென்ன தொழில்கள் மதுரைக்கு வந்துள்ளன? சதுரங்க வேட்டை படத்தின் நிஜ ஹீரோ மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தான்" என கடுமையாக விமர்சனங்களை முன்வைக்கிறார்.

பேசுகிறாரே தவிர போராடவில்லை: தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் கதிர்நிலவன் கூறுகையில், "எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி என்னவானது? சு.வெங்கடேசன் அதுகுறித்துப் பேசுகிறாரே ஒழிய, தொடர் போராட்டங்கள் எதுவும் நடத்தவில்லை. மெட்ரோ ரயிலுக்கான பணிகளில் தொடர்ந்து தொய்வு நிலவுகிறது. மதுரையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக அறிவிக்கப்பட்ட கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நிரந்தர கார்கள், இருசக்கர வாகன நிறுத்துமிடங்கள் அமைப்பதற்கான எந்தப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை. இயற்கையை, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மதுரை மிகவும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள கண்மாய்களும்கூட சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சுருங்குதலுக்கு ஆளாகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தடுப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மாநில அரசுக்கு எதிராக பேசவில்லை: சதாசிவ நகரைச் சேர்ந்த இசக்கியப்பன் கூறுகையில், "நாளைய தலைமுறையின் எம்.பி. என்று அழைக்கப்படுகின்ற சு.வெங்கடேசன், மாணவர்களின் கல்விக் கடனுக்காக மிக முனைப்புடன் இயங்குகிறார், அது வரவேற்கத்தக்கது. தேசிய அளவிலான பல்வேறு தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்களின் உரிமையைப் பெற்றுத் தந்திருக்கிறார். ஊழலற்ற மிகத் தூய்மையான மனிதர்.

ஆனால், விமான நிலைய விரிவாக்கத்திற்கான பணிகள் மாநில அரசால் தொய்வாகியுள்ளது. அதற்குரிய பணிகளை எம்.பி. மேற்கொள்ளவில்லை. மதுரை - தூத்துக்குடி இடையேயான இரட்டை ரயில் பாதைப் பணிகளில் இவரது பங்கு பூஜ்யமாகவுள்ளது. வண்டியூர் கண்மாயைச் சீரமைப்போம் என கடந்த 30 ஆண்டுகளாக அனைத்து அரசியல் கட்சிகளும் கூறிக்கொண்டுதான் இருக்கின்றன. மதுரை எம்.பியும் இந்தப் பணியில் இதுவரை எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் போக்கு குறித்து எந்தவித கருத்தும் தெரிவித்ததில்லை. மத்திய அரசை எதிர்த்து பல்வேறு வகையிலும் குரல் கொடுக்கும் எம்.பி., மாநில அரசின் மக்களுக்கு எதிரான பல்வேறு செயல்பாடுகளில் வாய் திறந்ததில்லை" என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மாரியம்மன் தெப்பக்குளம்

எம்பி நிதியில் மேற்கொள்ளும் பணிகளில் தொய்வு: செல்லூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் கூறுகையில், "நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியை மத்திய அரசிடமிருந்து அதிகமாகக் கேட்டுப் பெறவில்லை. செல்லூர் பகுதி அங்கன்வாடி கட்டுமானப் பணிகள் எம்.பியின் நிதியில் மிகவும் தொய்வாகத்தான் நடைபெறுகிறது. நமது எம்.பி. கேட்டும் மத்திய அரசு நிதி தரவில்லையா? என்பது தெரியவில்லை.

கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாதவை நிறைய உள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனை, அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் வழங்கப்படும் நிதி இழுபறியாகவும், தாமதமாகவும் வழங்குகிறார்கள். இதையெல்லாம் சரி செய்ய வேண்டியது நாடாளுமன்ற உறுப்பினரின் கடமை" என்கிறார்.

கல்விக்கடன் பெற்றுத் தந்ததை பெருமையாக பேசுகிறார்: பாஜக நிர்வாகி அறிவுச்செல்வம் கூறுகையில், "சமூக ஊடகங்கள் பெரிய அளவில் வளர்ந்துள்ள நிலையில், நாம் தேர்ந்தெடுத்த உறுப்பினர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை தற்போது மக்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். நமது மதுரை எம்.பி. வெறும் அறிக்கை விடக்கூடியவராகத்தான் உள்ளாரே தவிர, ஆக்கப்பூர்வமாக அவர் செயல்படவில்லை.

மத்திய அரசை எதிர்த்துக் குரல் கொடுக்கும் எம்.பி. தனது தொகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகள், தொழிற் கட்டமைப்புகள் குறித்து கவனம் கொடுக்கவேயில்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோயில்தான் மதுரையின் அடையாளம். அதனைச் சுற்றி இப்போதும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது. இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தோர் மிகவும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

வாகன நிறுத்துமிடங்கள் முறையாக அமைக்கப்படவில்லை. தனது கூட்டணிக் கட்சியான ஆளும் திமுகவிற்கு அழுத்தம் கொடுத்து, அவற்றை முறைப்படுத்த அவர் எந்தவித செயல்பாடுகளும் செய்யவில்லை. கல்வியும், மருத்துவமும் இலவசமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுகின்ற காலத்தில், கல்விக் கடன் பெற்றுத் தந்ததை மிகப் பெருமையாகப் பேசுகிறார். இது அவரது கட்சி சித்தாந்தத்திற்கே விரோதமானது" என்கிறார்.

பெரியார் பேருந்து நிலையம்

பாரபட்சமில்லாமல் பணிகளைச் செய்துள்ளார்: சிபிஎம் கட்சியின் செல்லூர் 23ஆவது பகுதி மாமன்ற உறுப்பினர் குமரவேல் கூறுகையில், "கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்றில் உலகமே பாதிக்கப்பட்டிருந்தபோது, மதுரையில் அன்னவாசல் என்ற திட்டத்தின் வாயிலாக, அனைவருக்கும் ஒரு மாத காலம் உணவு விநியோகம் செய்தார். மேற்படிப்பு படிக்கும் அடித்தட்டு, ஏழை மாணவ, மாணவியருக்குப் பெருமளவில் வங்கிக்கடன் பெற்றுத்தந்துள்ளார். இந்திய அளவில் இது பெரும் சாதனையாகும்.

மாற்றுத்திறனாளிகளுக்காக 15 முகாம்கள் நடத்தி அவர்களுக்கான அடையாள அட்டை, உதவித்தொகை மற்றும் உபகரணங்களைப் பெற்றுத் தந்துள்ளார். இந்தியப் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதிக்கு அடுத்தபடியாக மாற்றுத்திறனாளிகள் அதிகம் பயனடைந்தது மதுரை நாடாளுமன்றத் தொகுதி என்றே குறிப்பிடலாம்.

அதேபோன்று அவருக்கு ஒதுக்கப்பட்ட நாடாளுமன்றத் தொகுதி நிதியின் வாயிலாக, சமுதாயக்கூடம், பள்ளிக்கட்டிடம், அங்கன்வாடி கட்டடம், வண்டியூர் தெப்பக்குளம் பகுதியில் உயர் கோபுர மின் விளக்குகள் என ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பாரபட்சமில்லாமல் பல்வேறு பணிகளைச் செய்துள்ளார்.

இதனைத் தவிர இந்திய நாடாளுமன்றத்தில் மதுரை மக்களுக்காக மட்டுமன்றி, இந்திய மக்கள் அனைவருக்காகவும் குரல் எழுப்பியுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வருகிறார். மதுரை அரசரடி ரயில்வே மைதானத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முயற்சிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகிறார். இதற்காகக் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறார்" என்றார்.

எம்பி சு.வெங்கடேசன் பதில் ரியாக்‌ஷன்: தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள் உதவி முகாம் மூலம் 19 ஆயிரத்து 800 பேர் பயனடைந்துள்ளனர். 4 ஆண்டுகளில் ரூ.450 கோடி கல்விக் கடன் பெற்றுத் தந்துள்ளோம். போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பிரத்யேக படிப்பு பூங்கா, எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நாடாளுமன்றத்தில் 17 முறை தலையீடு செய்துள்ளதாகவும், தங்களது முயற்சியால் தான் மதுரையில் டைடல் பார்க்கை அரசு அறிவித்துள்ளதாகவும் அதற்கான கட்டுமான பணிகள் 6 மாதத்தில் துவங்கும் எனத் தெரிவித்தார்.

களம் காண காத்திருப்பவர்கள்: திமுகவைப் பொறுத்தவரையில் மதுரை தொகுதியைக் கூட்டணி மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கினால் மீண்டும் சு.வெங்கடேசன் போட்டியிடுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் மதுரையைக் கூட்டணிக் கட்சிக்கு கொடுக்கக் கூடாது எனத் தலைமைக்கு திமுகவினர் கோரிக்கை விடுப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் தான் மார்க்சிஸ்ட் உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கையெழுத்தான பிறகு எந்த தொகுதிகள் என அறிவிக்கப்படாமல் உள்ளது.

அதிமுக:அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் சரவணன் மதுரை தொகுதியில் களமிறங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த முறை சு.வெங்கடேசனை எதிர்த்துப் போட்டியிட்டு இரண்டாம் இடம் வந்த ராஜ் சத்யன் இந்த முறை விருதுநகர் தொகுதியை விரும்புவதாகக் கூறப்படுகிறது. அதனால் சரவணனின் ரூட் கிளியராக உள்ளதாக கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

பாஜக:பாஜகவிற்கு கூட்டணி இன்னமும் உறுதியாகாததால் மதுரையில் பாஜக நேரடியாகக் களமிறங்குமா அல்லது கூட்டணி கட்சிக்கு ஒதுக்குமா என முடிவாகவில்லை.

நாம் தமிழர்:வழக்கம் போல இந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில் மதுரை தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் உள்ளது.

தமிழக அரசியல் களத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மதுரையில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவும் நிலையில் இந்த கட்சிகள் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் மீது அனைத்து தரப்பினர் கவனமும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல்: திருநெல்வேலி எம்.பி., எஸ்.ஞானதிரவியம் செய்ததும்..! செய்யத் தவறியதும்..!

Last Updated : Mar 2, 2024, 9:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details