கிருஷ்ணகிரி: ஓசூரில் விளையாட்டுப் போட்டிக்குச் சென்ற பள்ளி மாணவி ஆசிரியையின் கைக்கடிகாரத்தை திருடியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், வாலிபால் பயிற்சி ஆசிரியர் மாணவியை நடுரோட்டில் வைத்து கடுமையாகத் தாக்கும் வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, பயிற்சி ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள எலுவப்பள்ளி என்ற இடத்திலுள்ள தனியார்ப் பள்ளியில், கடந்த வாரம் பள்ளி மாணவர்களுக்கு இடையே மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட 30 அணிகள் பங்கேற்றிருந்தனர். அதில், ஓசூரில் உள்ள அரசு உதவிப் பெறும் ஒரு பள்ளியின் சார்பில் மாணவிகள் பங்கேற்று, முதல் பரிசை வென்றனர்.
மாணவியை நடுரோட்டில் வைத்து பயிற்சி ஆசிரியர் தாக்கும் காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu) இருந்தபோதும் தனியார்ப் பள்ளிக்கு வெளியே போட்டியில் வெற்றி பெற்ற பள்ளியின் வாலிபால் பயிற்சி ஆசிரியர் தியாகராஜன், ஒரு மாணவியை முடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி நடுரோட்டில் சரமாரியாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்.. மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
அதாவது, தனியார்ப் பள்ளி ஆசிரியையின் கைக்கடிகாரத்தை மாணவி திருடியதாகவும், ஆசிரியை கேட்டபோது பயிற்சியாளர் தியாகராஜன் எங்களது மாணவிகள் திருடுவதில்லை எனத் துணை நின்றதால் ஆசிரியை அனைவரையும் திட்டியதாகவும், அப்போது மாணவி கைக்கடிகாரத்தைத் திருப்பி கொடுப்பதாகக் கூறியதால் அதிர்ச்சியடைந்த பயிற்சியாளர் மாணவியின் தாய்க்குத் தகவல் தெரிவித்ததாகவும், அதனைக் கேட்ட தாய் தனது மகளை அடிக்கச் சொன்னதாகவும், அதனாலேயே வாலிபால் பயிற்சி ஆசிரியர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த காட்சிகள் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, பயிற்சி ஆசிரியர் பள்ளியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாகலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு, தற்போது தியாகராஜனைக் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளி மாணவியின் தாயார் கூறுகையில், "எனது மகள் குறித்து தகவல் வந்தபோது, நான் கூறியதாலேயே பயிற்சியாளர் கண்டித்தார் எனவும், இதனை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை எனவும், ஆனால், வீடியோவை வெளியிட்ட தனியார்ப் பள்ளி மீதும் புகார் அளிக்க இருப்பதாகவும்" கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்