சென்னை:தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வேதாந்தா குழுமத்தின் மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், ஆலை காற்று மற்றும் நீர் மாசுபாடுச் சட்டங்களை நீண்ட காலமாக மீறுவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட உச்ச நீதிமன்றத்தில் அழுத்தமான வாதங்களை முன்வைத்த தமிழக அரசிற்கு தூத்துக்குடி மக்கள் சார்பாகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய போராட்டக் குழுவினர் சார்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X வலைத்தளப் பதிவில், "சுற்றுச்சூழலுக்கும், தூத்துக்குடி மக்களின் உடல் நலனுக்கும் தீங்கு விளைவித்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவோம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, உச்ச நீதிமன்றத்தில் அழுத்தமான வாதங்களை முன்வைத்த நமது திராவிட மாடல் அரசுக்கு தூத்துக்குடி மக்கள் சார்பாக வந்திருந்த குழுவினர் நன்றி தெரிவித்தனர்.