சென்னை:தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார், தமிழ்நாடு அரசிற்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் சுயநிதி அடிப்படையில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளுக்கு காலம் காலமாக வழங்கி வந்த தொடர் அங்கீகாரம் கூட சுமார் 10,000 பள்ளிகளுக்கு இதுவரை வழங்கவில்லை.
மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளை பல்லாயிரக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டி வாங்கி கோப்புகளை அனுப்பியும், தனியார் பள்ளிகள் இயக்குனர் அலுவலகத்திலேயே வருடக் கணக்கில் நிலுவையில் வைத்துள்ளனர். இதனால் தனியார் பள்ளிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.
தொடர் அங்கீகாரம் கொடுக்காதது யார் தவறு? நான்கு சான்றுகளை வைத்துக்கொண்டு அங்கீகாரம் வழங்கிய காலமெல்லாம் போய், இன்றைக்கு புதிது புதிதாக சான்றுகளைக் கேட்டும் அங்கீகாரம் தர மறுத்தும் காலம் தாழ்த்தி வருவதால் பள்ளி வாகனங்கள் எப்.சி செய்ய முடியாமல், கடன் வாங்க முடியாமல், வாங்கிய கடனுக்கு வட்டியும் தவணையும் கட்ட முடியாமல் தத்தளித்துக் கொண்டுள்ளனர்.
எனவே, அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் பழைய பள்ளிகளுக்கு எந்தவித நிர்பந்தமும், நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக மூன்றாண்டு காலங்களுக்கான தொடர் அங்கீகார ஆணை வழங்கிட வேண்டும். அதேபோல், அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தில் (RTE) மாணவர்களை சேர்த்ததில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான கல்விக் கட்டண பாக்கி இதுவரை வழங்கவில்லை.