தருமபுரி: தருமபுரி மாவட்டம், அரூர் பேருந்து நிலையத்திலிருந்து ஓசூர் வரை செல்லும் அரசுப் பேருந்தில் கடந்த பிப்.20ஆம் தேதி 59 வயது மதிக்கத்தக்கப் பெண், பயணம் செய்து போது, அவர் மாட்டிறைச்சியை எடுத்து வந்ததாகக் கூறி, பேருந்து நடத்துநரும், ஓட்டுநரும் நடுவழியில் அப்பெண்ணை இறக்கி விட்டுள்ளனர். இதனால், செய்வதறியாது தவித்த பயணி நடந்தே அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று வேறு பேருந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மீண்டும் அதே வழியில் வந்த பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பெண் பயணியைப் பாதுகாப்பில்லாமல் நடு வழியில் இறக்கி விட்ட சம்பவம் போக்குவரத்துக் கழகத்திற்குத் தெரிய வந்ததையடுத்து, பேருந்து நடத்துநர் ரகு மற்றும் ஓட்டுநர் சசிகுமார் ஆகியோரிடம் விசாரணை செய்ததில் இருவரும் நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
அதனால் பேருந்து நடத்துநர், ஓட்டுநர் ஆகிய இருவரையும் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சேலம் மண்டலம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய பாதிக்கப்பட்ட பெண், “நான் கடந்த 30 ஆண்டுகளாக மாட்டு இறைச்சியை விற்பனை செய்து வருகிறேன். கணவா் இறந்து 30 ஆண்டுகள் ஆன நிலையில், பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக இறைச்சியை விற்றுப் பிழைப்பு நடத்தி வருகிறேன்.
எனக்கு இதைவிட எந்த வேறு எந்தத் தொழிலும் தெரியாது. இது தான் எனக்குத் தெரிந்த தொழில். கடந்த ஆறு மாதமாகப் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் பேருந்தில் ஏற வேண்டாம் என என்னை எச்சரித்து வந்தனர். இன்று ஒரு நாள் மட்டும் விடுங்கள், எனக்காக 40 பேர் காத்திருப்பார்கள் என்று கூறிய போதும், நீ இறங்கு, நீ ஒரு பொம்பளையா எனக் கூறி உடனடியாக இறங்கச் சொன்னார்கள். எனக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதி இருக்கிறது.