சென்னை: மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்த நாளையொட்டி, இன்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அக்கட்சி அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி, அவரது முழு திருவுருவச் சிலையினை திறந்து வைத்து கண்ணீருடன் மரியாதை செலுத்தினார். பின்னர் தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவரது மகன்கள் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "இனி தேமுதிக தலைமை அலுவலகம் கேப்டன் ஆலயம் என அழைக்கப்படும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. பெண்கள், அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. பெண்களுக்கான பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.
விஜயகாந்த் இல்லத்தில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு முன்னறிவிப்பின்றி திரும்பப் பெறப்பட்டுள்ளது. காவலர்கள் பாதுகாப்பு ஆளுங்கட்சி இருக்கும் இடங்களில் மட்டும் அமர்த்தி உள்ளனர். ஆனால், தமிழகத்தில் பெண் அரசியல் தலைவர்களுக்கு இருப்பது இல்லை. பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமையாகும். சென்னை சாலிகிராமத்தில் 2 பெண் தலைவர்கள் இருக்கிறோம். விஜயகாந்த் வாழ்வதற்காக ஆசையாக கட்டப்பட்ட இல்லம் வெகுவிரைவில் திறக்கப்படும்.
தவெக கொடி விவகாரம்: விஜய் கட்சிக் கொடி அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் செல்ல வேண்டிய தூரம் அதிகம். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தி கோட் திரைப்படத்தில் AI தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் இடம் பெற்றுள்ளார். அது தொடர்பாக நன்றி தெரிவிக்கும் விதமாக என்னைச் சந்தித்தார். கோட் திரைப்படத்தில் AI தொழில்நுட்பத்தில் விஜயகாந்தின் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளது. முழுவதுமாக முடிக்கப்பட்டு சிறப்புக் காட்சிகள் காண்பிப்பதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
திமுக - பாஜக ரகசிய உறவு: திமுகவும் - பாஜகவும் எலியும் பூனையூமாக இருந்தனர். தற்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நாணயம் வெளியிட்டுள்ளனர். நாணயம் வெளியிடுவதில் தேமுதிகவிற்கு எந்தவித மாற்று கருத்தும் இல்லை.