திருப்பூர்:உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள குழிப்பட்டி மலைவாழ் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் சாலை வசதி கேட்டு தமிழ்நாடு அரசிடம் கோரிக்கைகள் வைத்திருந்தாலும், இன்று வரை மலைக்கிராமங்களுக்கு சாலை வசதிகள் எதுவும் ஏற்படுத்தி தரவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் அவர்கள் காடு, மலைவழிப் பாதைகளில் கரடு, முரடான இடங்களில் நடந்தே செல்லும் நிலை உள்ளது. விபத்து, மகப்பேறு உள்ளிட்ட அவசர நிகழ்வுகளுக்கு மருத்துவமனைக்குச் செல்வது என்பது இந்த பகுதி மலைவாழ் மக்களுக்கு மிகவும் கடினமானதாகவே இருந்து வருகிறது. இங்கு சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கியும் பணிகள் தொடங்காமல் இழுபறியாக இருப்பதால், அப்பகுதி பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.