திருச்சி: திருச்சி துவாக்குடியில் தேசிய தொழில்நுட்பக் கழகம்(NIT) அமைந்துள்ளது. இந்த கல்வி நிறுவனத்தில் தமிழ்நாடு மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பொறியியல், அறிவியல் தொழில்நுட்பம் , ஆராய்ச்சிகள் என அறிவியல் சார்ந்த படிப்புகளை படித்து வருகின்றனர். தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் பிரக்யான் 24 என்ற தலைப்பிலான தொழில்நுட்ப விழா வரும் 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இது குறித்து திருச்சி என்.ஐ.டி. இயக்குநர் ஜி. அகிலா செய்தியாளர்களிடம் பேசுகையில், "திருச்சி என்ஐடியில் தேசிய அளவில் ஆண்டுதோறும் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் வகையில் நடத்தப்படும் 'பிரக்யான் தொழில்நுட்ப விழா' இந்த ஆண்டு வரும் 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு நடைபெற உள்ளது.
இந்த விழாவை எல்அன்ட்டி(L&T) ஏவுகணைகள் தொழில் பிரிவின் தலைவர் லக்ஷ்மேஷ் தொடங்கி வைக்கிறார். இதில், மருத்துவத்தில் நோபல் பரிசு வென்ற ரிச்சர்ட் ராபர்ட், எப்"ஃ"பிஐ முன்னாள் ஏஜென்ட் ஸ்காட் ஆகன்ட்பவும், தொல்பொருள் ஆய்வாளர் அர்ஷ் அலி, வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சேஷசாயி காந்தம்ராஜு உள்ளிட்ட பலர் பங்கேற்கும் பயிலரங்கம் நடைபெறுகிறது.