சேலம்: காவிரி ஆற்றின் குறுக்கே ராசிமணல் எனும் பகுதியில் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் அணைகட்ட சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தக் கோரி, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு அளித்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காவிரி விவசாய சங்க பொதுச் செயலாளர்பி.ஆர்.பாண்டியன், "கர்நாடக அரசு உபரிநீரை மட்டுமே தமிழகத்திற்கு திறந்துவிட்டு கணக்கு காட்டுகிறது. தற்போது அந்த உபரிநீரை தடுக்கவும் மேகதாதுவில் அணை கட்ட முயற்சித்து வருகிறது.
இதனைத் தடுத்து ராசிமணல் எனும் பகுதியில் அணை கட்டி டெல்டா விவசாயத்தை பாதுகாப்பதோடு, உபரிநீர் வீணாக கடலுக்குச் செல்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கர்நாடகாவில் தேசிய கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்வதால், தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகின்றனர்.
காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசு தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி ராசிமணல் பகுதியில் அணைக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.