திருவாரூர்:திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, “தமிழ்நாடு முழுமையிலும் கோடை மழை பேரழிவு பெருமழையாகப் பெய்து நெல் சாகுபடி அடியோடு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், அழிய தொடங்கியுள்ளது. மாற்று பயிர் சாகுபடியை தமிழக அரசு வற்புறுத்தியதை ஏற்று பருத்தி சாகுபடி பெருமளவில் மேற்கொண்டனர்.
முதல் பட்டம் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், முழுமையாக அழிந்துவிட்டது. எள், நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்து பயிர்களும் அழிந்து போயிருக்கிறது. வாழை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் முழுமையாக அழிந்துவிட்டன. தமிழ்நாடு அரசு தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் காரணம் காட்டி, பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க மறுப்பது ஏற்கத்தக்கதல்ல. சிறப்பு அனுமதியை பெற்று உடனடியாக கணக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்.
நெல் ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாயும், பருத்திக்கு ஏக்கர் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை (Mullaperiyar Dam) வலுவிழந்து விட்டதாக கூறி, புதிய அணை கட்டுவதற்காக கேரளா அரசு சட்டவிரோதமாக கொடுத்த விண்ணப்பத்தின் மீதாக ஆய்வு தொடங்க உள்ளது. இதனை தமிழ்நாடு அரசு மூடி மறைக்க முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.