மயிலாடுதுறை:சீர்காழியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காவிரி விவசாய சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஆர்.பாண்டியன், "தமிழ்நாட்டில் முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரி, அமராவதி, சிறுவாணி உள்ளிட்ட அனைத்து நதிநீர் உரிமைகளும் பறிபோகி வருகிறது. இதனை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாறாக மத்திய, மாநில அரசுகள் பொறுப்புகளை தட்டிக் கழித்து வருகிறது. மேகதாது அணை கட்டினால் தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் இழந்து விடும்.
அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கடந்த ஒரு வாரமாக அனைத்து விவசாயச் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை செய்து வருகிறோம். அடுத்தகட்ட போராட்டத்தை தீவிரமாக்கும் வகையில், சிறுவாணி அணை குறுக்கே சிலந்தி ஆற்றில் அணை கட்ட எதிர்க்கும் கேரள அரசைக் கண்டித்து கேரள எல்லையை முற்றுகையிட உள்ளோம். காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது அணை கட்ட தீர்மானம் நிறைவேற்றியது உச்ச நீதிமன்றத்திற்கு எதிரானது.
இதற்கு தமிழக அரசும் துணை போகிறது. வருகிற ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். கடந்த ஆண்டு கர்நாடக அரசு நமக்கு வழங்க வேண்டிய 98 டிஎம்சி நிலுவை தண்ணீரையும், தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும். மேகதாது அணைக்கட்டும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்.