புதுச்சேரி:நாட்டின் 18வது மக்களவைத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதில், புதுச்சேரியில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெற்றது. இருப்பினும், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஜூன் 6-ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தன.
தற்போது தேர்தல் விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால், அரசு சார்ந்த நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அந்த வகையில், புதுச்சேரியில் ஆண்டுதோறும் உயரும் மின் கட்டணம் தேர்தல் விதிகளால் அமலுக்கு வராமல் இருந்தது. இந்த நிலையில், நாளை (ஜூன் 16) முதல் புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது.
இதன்படி, வீட்டு உபயோகத்துக்கான கட்டணம் 50 யூனிட் வரை ரூ.1.45-ல் இருந்து ரூ.1.95 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், வீட்டு உபயோகத்துக்கான 100 யூனிட் வரையிலான கட்டணம் ரூ.2.25-ல் இருந்து ரூ.2.70 ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரை ரூ.3.25-ல் இருந்து ரூ.4 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை ரூ.5.40-ல் இருந்து ரூ.6 ஆகவும் மற்றும் 300 யூனிட்டுக்கு மேல் ரூ.6.80-ல் இருந்து ரூ.7.50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், உயர் மின்னழுத்த மின்சாரத்தை உபயோகப்படுத்துபவர்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5.60-ல் இருந்து ரூ.6 ஆகவும், நிலைக்கட்டணம் ரூ.420-ல் இருந்து ரூ.450 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம், சிறு விவசாயிகளுக்கான நிலைக்கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.25 ஆகவும், மற்ற விவசாயிகளுக்கு 75 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:விஷவாயு தாக்கி நான்கு நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - ஆளுநரிடம் புதுச்சேரி மக்கள் வேதனை