சென்னை:2024 நாடாளுமன்றத் தேர்தல், வரும்ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக 39 தொகுதிகளில் நடைபெற உள்ள நிலையில், தோ்தலை முன்னிட்டு 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் தெரிவித்த விருப்பத்தின் அடிப்படையில், வீட்டிலிருந்தே தபால் வாக்கு முறையில் வாக்களிக்கும் வசதி, இந்திய தோ்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அதன் அடிப்படையில், சென்னையில் வட சென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை என மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, கடந்த மார்ச் 17ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12 D படிவம் வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டது.
இதையடுத்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள், வாக்குச்சாவடி அலுவலரால் பெறப்பட்டது. அதில், சென்னையில் 16 சட்டமன்றத் தொகுதிகளில் 4 ஆயிரத்து 175 வாக்காளர்கள் 85 வயதுக்கு மேற்பட்டவர்களும், 363 மாற்றுத்திறனாளிகளும் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பித்து உள்ளனர். மொத்தமாக, சென்னையில் உள்ள 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 4 ஆயிரத்து 538 வாக்காளர்கள் தபால் வாக்கு செலுத்த உள்ளனர்.
வீடு வீடாகச் சென்று தபால் வாக்குகள் பெறுவதற்கு, சென்னையில் 67 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தபால் வாக்கு சேகரிக்கும் குழுவில், வாக்கு சேகரிப்பு அலுவலா், நுண்கண்காணிப்பாளா், வாக்குச்சாவடி நிலை அலுவலா், வீடியோகிராபா், துப்பாக்கி ஏந்திய போலீசார் இடம் பெற்றுள்ளனர்.
வாக்குச்சாவடிகளில் வந்து வாக்கு செலுத்த இயலாதவர்கள் தனியே அட்டவணைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு, வீடு வீடாகச் சென்று அவர்களுக்கு வாக்களிப்பதற்கான விளக்கங்களை தலைமை வாக்குச்சாவடி அலுவலர் தெரிவித்து, ரகசியமான முறையில் அவர் வாக்களிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார். அந்த வகையில், வாக்காளர்களின் வீடுகளில் வாக்கு செலுத்துவதற்கான அமைப்புகளை ஏற்படுத்தி வீடியோ பதிவேற்றம் செய்து, ரகசியமான முறையில் அவர்களது வாக்குகள் பெறப்படும்.
சுமார் 20 நிமிடம் நடைபெறும் இந்த நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டு, அவர்களது வாக்குகள் தபால் வாக்குகளாக எண்ணப்படும். இன்று (திங்கட்கிழமை) தொடங்கி, ஏப்ரல் 13ஆம் தேதி வரை சென்னையில் உள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் என வாக்கு மையங்களுக்குச் சென்று வாக்களிக்க முடியாதவர்கள், வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு செலுத்த உள்ளனர்.
இதையும் படிங்க:திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும்.. திருச்சி ரோடு ஷோவில் ஜெ.பி.நட்டா பேச்சு - JP NADDA ROAD SHOW