சென்னை: போரூரில் 5 வயது சிறுவனின் நுரையீரலில் சிக்கிய எல்இடி பல்பு, அறுவை சிகிச்சை இன்றி, பிராங்கோஸ்கோபி மூலமாக வெற்றிகரமாக அகற்றி, ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சாதனை புரிந்துள்ளது.
சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் ஒருவன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக எல்இடி பல்பை முழுங்கியுள்ளான். அந்த எல்இடி பல்ப் நுரையீரலில் சென்று சிக்கியதால், அச்சிறுவனுக்கு மூச்சுத் திணறல், இருமல் ஏற்பட்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர்கள், கடந்த ஒரு மாதமாக பல்வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எல்இடி பல்பை (LED Bulb) பிராங்கோஸ்கோபி மூலம் எடுக்க முயற்சி செய்துள்ளனர்.
இருப்பினும் பல்பை எடுக்க முடியாததால், அனைத்து மருத்துவமனையிலும் அறுவை சிகிச்சை மூலமாக பல்பை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால் சிறுவனின் பெற்றோர்கள் அறுவை சிகிச்சை செய்யாமல் பல்வேறு மருத்துவமனையில் முயற்சி செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிறுவனை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனுக்கு சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில், ஒரு எல்இடி பல்ப் நுரையீரலில் பதிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நுரையீரலில் சிக்கிய எல்இடி பல்பை பிராங்கோஸ்கோபி மூலம் எடுக்க முயல்வதாகவும், முடியாவிட்டால் உடனடியாக அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன்பின், சிறுவனுக்கு பிராங்கோஸ்கோபி சிகிச்சை தொடங்கப்பட்டு, இரண்டு மணி நேரம் போராடி நுரையீரலில் சிக்கி இருந்த எல்இடி பல்பை லாவகமாக வெளியே எடுத்தனர்.
அறுவை சிகிச்சை இன்றி பிராங்கோஸ்கோபி சிகிச்சை மூலம் பத்திரமாக எல்இடி பல்பை வெளியே எடுத்து, மருத்துவமனை புதிய சாதனை படைத்துள்ளது. தற்போது சிறுவன் உடல் நல ஆரோக்கியத்துடன் வீட்டிற்குச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எல்இடி பல்பை முழுங்கி ஒரு மாத காலமாக உயிருக்குப் போராடி வந்த சிறுவனின் நுரையீரலில் அறுவை சிகிச்சை செய்யாமல், பிராங்கோஸ்கோபி சிகிச்சை மூலம் பல்பை எடுத்து சிறுவனின் உயிரை மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:பள்ளியில் தமிழ் பாடம் எடுத்த ஆசிரியருக்கு உதவிய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி! - Retired IAS Officer Balachandran