தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆபத்தில் இருக்கும் 5 டெல்டா மாவட்டங்கள் - பூவுலகின் நண்பர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்..! - DELTA DISTRICTS

புயல் வருவதன் காரணமாக, சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து பூவுலகின் நண்பர்கள் குழுவினர் கூறுவது பற்றிய சிறப்பு தொகுப்பை இங்கு காணலாம்.

பூவுலகின் நண்பர்கள்
பூவுலகின் நண்பர்கள் குழுவின் பிரபாகரன் வீர அரசு (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2024, 8:26 PM IST

சென்னை: புயல் வருவதன் காரணமாக கடல் நீர் மட்டம் உயரும் என்றும், இது சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்தும் பூவுலகின் நண்பர்கள் குழுவின் பிரபாகரன் வீர அரசு நமது ஈ டிவி பாரத் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பிரபாகரன் வீர அரசு கூறுகையில், "சென்னையை பொறுத்தவரை சமமான தரை பகுதியை கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து தரைப்பகுதி என்பது 7 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது சென்னையின் அனைத்து பகுதிகளிலும் 7 மீட்டர் இருக்காது, சில இடங்களில் சற்று உயரமாகவும் சில இடங்களில் அதற்கும் குறைவாகவும் இருக்கும். அதே போல் அடையாறு, கடலில் கலக்கும் இடம், கூவம் ஆறு, பட்டினம்பாக்கம், அங்கெல்லாம் 1 மீட்டர் உயரமே இருக்கும்.

புயல் நேரங்களில் கடலின் நீர் மட்ட உயரம் சற்று அதிகரிக்கும் என்பது இயல்பு. இந்த உயரம் என்பது அந்த புயலின் தீவிர தன்மையை பொறுத்து அதிகரிக்கும். கடலோர பகுதிகளில் இந்த கடல் மட்ட உயர்வு அதிகரிக்கும் போது கடலில் கலக்க கூடிய ஆறுகளின் நீர் கடலில் கலக்காமல் மீண்டும் பின் நோக்கி வருகிறது. இது அதிகமாவதால் கடல் நீரும் சேர்ந்து கடல் வெள்ளம் ஏற்படுகிறது. கடந்த முறை வந்த மிக்ஜாம் புயலானது இந்த மாதிரிதான் பாதிப்பை ஏற்படுத்தியது.

காலநிலை மாற்றம்: காலநிலை மாற்றத்தை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பாதிப்புகளின் தீவிரத்தன்மை வெவ்வேறாக உள்ளது. தமிழக டெல்டா மாவட்டங்களில் சென்னையை காட்டிலும் வெப்ப அலை தாக்குதல் என்பது குறைவாக உள்ளது. அதிக கனமழை என்பது டெல்டா மாவட்டங்களுக்கு மிக பெரிய ஆபத்தாகும்.

குறைந்த நேரத்தில் அதிக அடர்த்தியுடைய மழை பொழிவது என்பது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இது குறித்து காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு (IPCC) பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். உலகம் முழுவதும் அவர்கள் ஆய்வு செய்ததில் நீர் சுழற்சியை இந்த காலநிலை மாற்றம் பெரிதளவில் பாதித்திருக்கிறது. அதனால் தான் தற்போது ஆங்காங்கே மேகவெடிப்பு, அதி தீவிர கனமழை போன்றவை நடைபெறுகின்றன.

பாதிப்பிற்குள்ளாகும் டெல்டா மாவட்டங்கள்: தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தை சோதனை செய்வதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு சார்பில் ஸ்டூடியோ ஒன்று அமைத்திருக்கின்றனர். அதில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்னென்ன பாதிப்புகள் இருக்கும் என்று கணிக்கின்றனர். மேலும், பல்வேறு தரவுகளை சேகரித்துள்ளனர். அந்த தரவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது, டெல்டா மாவட்டங்கள் பெரும் பாதிப்பில் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

வெள்ளம் எந்தெந்த மாவட்டங்களில் அதிகமாக இருக்கும் என்று பார்க்கும் போது முதலாவதாக மயிலாடுதுறை, இரண்டாவதாக நாகப்பட்டினம், மூன்றாவதாக கடலூர், நான்காவதாக தஞ்சாவூர், ஐந்தாவதாக திருவாரூர், அதன் பின்னர் சென்னை உள்ளது. மற்றும் இந்த இடங்களில் மழை பொழிவு 26 சதவீதத்திற்கும் மேலும் அதிகரிக்கும் என்று அந்த தரவுகள் கூறுகின்றது.

இதுமட்டும் அல்லாது, வரும் காலங்களில் வர கூடிய புயலின் பாதிப்புகள் கூட அதிகமாக இந்த ஐந்து மாவட்டங்களில் தான் அதிகமாக இருக்கும். எடுத்துக்காட்டாக தற்போது இருக்கும் புயலானது, காரைக்கால் பகுதிகளில் கரையை கடக்கும் என தகவல் வந்துள்ளது. இந்த மாதிரி ஒவ்வொரு புயல் வரும் போதும் அது டெல்டா மாவட்டங்களை நோக்கி வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இதையும் படிங்க:"நாளை காலை கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்": 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

கடல் நீர் உட்புகுதல்: மற்ற மாவட்டங்களில் வெள்ளமோ, அல்லது புயலோ வந்தால் அது அந்த மாவட்டத்திற்கான பிரச்சினை. ஆனால் டெல்டா மாவட்டங்களில் இந்த பாதிப்புகள் ஏற்பட்டால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கான பிரச்சனையாகும். இது உணவு உற்பத்தியை பாதிக்கும். அதனால், பொருளாதார ரீதியாக பெரும் தாக்கத்தை பொதுமக்கள் சந்திக்க நேரிடும். டெல்டா மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுதல் பெருமளவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. சதுப்புநிலங்கள் மற்றும் மாங்குரோவ் காடுகள் அனைத்தும் தண்ணீருக்குள் மூழ்கி வருகின்றன.

டெல்டா மாவட்டங்களில் கடல் நீர் ஒரு கிலோமீட்டருக்கு உள்புகுந்தால் நிலத்தின் தன்மை மாறுபடும். நிலமெங்கும் உப்பு தன்மை அதிகரிக்கும். இதன் காரணமாக விவசாயம் என்பது அந்த பகுதிகளில் பாதிக்கும். இன்று 1 கிலோ 50 ரூபாய் என்று விற்கப்படும் அரிசி வரும் நாட்களில் 1 கிலோ 500 ரூபாய் என்று விற்கும் நிலை ஏற்படும். கடல் நீர் உட்புகுதல் என்பது 10000 ஹெக்டர் நிலத்தை எடுத்துக்கொள்ளும். அதில் கிட்டத்தட்ட 8500 ஹெக்டர் விவசாய நிலங்கள் உள்ளது, இந்த பரப்பு மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கியுள்ளது. இதனால் பெரும் பாதிப்புகள் ஏற்படும்.

வெப்பநிலை அதிகரிப்பு: சென்னையில் காலநிலை மாற்றத்தால் வெப்பநிலை என்பது கண்டிப்பாக அதிகரிக்கும். தற்போது சராசரி வெப்பத்தை விட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமான வெப்பநிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னும் 30 வருடங்களுக்கு பிறகு சென்னையில் இன்னும் 2 அல்லது 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும். தற்போது ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் 0.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து கொண்டே வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கூறிய அறிக்கையில் இந்த நூற்றாண்டின் முடிவில் 3ல் இருந்து 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று கூறுகிறது.

40 டிகிரிக்கு மேல் அதிகமாக வெயில் அடிக்கும் நாட்களை வெப்பமான நாட்கள் என்று கூறுவார்கள். சென்னையில் வெப்பமான நாட்கள் என்பது இரட்டிப்பாக அதிகரிக்கும். 15 வருடத்திற்கு முன்னர் ஒரு வருடத்தில் 40 டிகிரி வெயில் அடிக்கும் நாட்கள் என்பது 25 நாட்கள் தான் இருந்தது. இந்த வருடத்தில் 60 நாட்களுக்கு மேல் வெயில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. 30 வருடங்களுக்கு பின்னர் ஒரு வருடத்திற்கு 140 நாட்கள் 40 டிகிரி செல்சியஸ் வெயில் அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் இரவு நேரங்களில் புழுக்கம் என்பதும் அதிகமாக இருக்கும். இது பொதுவாக வெயில் காலங்களில் 25 நாட்கள் நாம் தூங்குவதற்கு சிரமமாக இருக்கும். இது 30 வருடங்கள் கழித்து 200 நாட்களாக அதிகரிக்கும்.

மாற்று விவசாயம்: காலநிலை மாற்றத்தை சரி செய்வது என்பது அனைத்து நாடுகளும் முன்னெடுக்க வேண்டும். ஆனால் அதனை, ஒரு நாடு செய்தாலும் மற்றொரு நாடு செய்வதில்லை. குறிப்பாக வளர்ந்த நாடுகள் இந்த தவறுகளை செய்கின்றன. தற்போது இதை சரி செய்ய வேண்டுமென்றால், காலநிலைக்கு ஏற்ப நாம் பழகிக்கொள்ள வேண்டும். மேலும், சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

குறிப்பாக, டெல்ட்டா மாவட்டங்களில் வரும் காலங்களில் வர கூடிய பாதிப்புகளை சரி செய்வதற்கு மாற்று பகுதிகளை தேட வேண்டும். வேறு மாவட்டங்களில் விவசாயம் மேற்கொள்வதற்கு ஆய்வுகள் உடனே மேற்கொள்ள வேண்டும். தற்போது இருக்க கூடிய டெல்டா மாவட்டங்களில் காலநிலைக்கேற்ப மாற்று பயிர் என்ன பயிரிடலாம் என்றும் ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தற்போது இருக்கும் அரசு பல நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. ஆனாலும் செயல்படுத்தும் வேகம் என்பது சற்று குறைவாகவே உள்ளது. இயற்கை இடர்கள் வந்த பின் இவற்றை யோசிக்காமல் முன்னரே இதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்" என்று கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details