சென்னை: தமிழ்நாட்டில் ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், நாகப்பட்டினத்திலிருந்து 25 கி.மீ., தொலைவில் கீழ்வெண்மணி கிராமம் உள்ளது. அங்கு நிலக்கிழார்களால் 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி நடத்தப்பட்ட படுகொலையால் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பட்டியல் இன வேளாண் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (ஜன.28) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சென்றார்.
அப்போது கீழ்வெண்மணி கிராமத்திற்கு சென்றுள்ளார். அது குறித்து அவரின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டப் பதிவில், "நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்துக்குச் சென்று, '1968' படுகொலையில் உயிர் பிழைத்த ஒரே நபரான ஜி.பழனிவேலை சந்தித்தேன். மீனவர்கள் வசிக்கும் நம்பியார் நகரையும், பட்டியலின சமூகத்தினர் வாழும் ஜீவா நகரையும் பார்வையிட்டேன்.
கிராமங்கள் முழுவதும் மோசமான வறுமை நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த துரதிருஷ்டவசமான சகோதர, சகோதரிகள் சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என ஒருவரால் வியக்க மட்டுமே முடியும்" என தெரிவித்திருந்தார்.