தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலின் முதல் விஜய் வரை சர்வதேச அன்னையர் தினம் வாழ்த்து! - Mothers Day 2024 - MOTHERS DAY 2024

Mothers Day Wishes: உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் அன்னையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Chief Minister Stalin, Edappadi Palaniswami, Anbumani, Vijay
முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி, விஜய் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 12, 2024, 1:38 PM IST

சென்னை:ஒவ்வொரு வருடமும் மே 2வது வார ஞாயிற்றுக்கிழமை சர்வதேச அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், மே மாத 2வது ஞாயிற்றுக்கிழமையான இன்று (மே 12) உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்:அந்த வகையில் முதலமைச்ர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், “உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு அம்மா. தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் நாள் வாழ்த்துகள். ஈன்றவள் நம்மைச் சான்றோன் எனக் கேட்க வாழ்ந்து அன்னையரைப் போற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி:அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சிய்ஜ் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து கூறியுள்ளதாவது, “பூமி தாங்கும் முன்பே, நம்மையெல்லாம் பூவாய் தாங்கியதோடு, ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும், அன்பின் முழு வடிவமான அன்னையர் அனைவருக்கும் எனது இதயமார்ந்த 'அன்னையர் தின' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

'அம்மா' என்ற சொல்லை உச்சரிக்கும்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றுத் தந்து, தமிழக மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட இதயதெய்வம் அம்மா அவர்களின் நினைவுதான் நமக்கெல்லாம் வருகிறது.

போற்றுதலுக்குரிய அன்னையர் அனைவரும் பூரண நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் நிறை வாழ்வு வாழ்ந்திட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, உலகம் முழுவதும் வாழும் அன்னையர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த 'அன்னையர் தின' நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை:அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையும் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “கண்ணுக்குத் தெரிந்த கடவுளாய் பத்து மாதம் வயிற்றில் சுமந்து, பசி, தூக்கம் மறந்து, தன் ரத்தத்தை பாலாக ஊட்டி நம்மை வளர்ப்பவள் நம்முடைய அன்னை.

உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிருடனும் முதல் தொடர்பு கொள்ளும் மற்றொரு உயிர் என்றால் அது அன்னை தான். அந்த புதிய உயிருக்கு உலகின் அனைத்தையும் கருவிலிருந்தே முதன் முதலில் அறிமுகப்படுத்துவதும் அன்னை தான். அம்மா என்பது வெறும் வார்த்தை அல்ல வாழ்வின் சாரம். எல்லாருடைய வாழ்விலும் தாயின் பங்கு அளப்பரியது. அன்னை என்ற சொல்லின் வலிமை மிகப்பெரியது.

அத்தகைய பெருமைமிக்க அன்னையை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்று கிழமை உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் அனைவருக்கும் எனது அன்னையர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், “தாயின் அன்பையும் தாய்மையின் பெருமையையும் போற்றும் அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காகவும் ஓயாமல் உழைத்து, அனைவரையும் இணைக்கும் மையப்புள்ளியாகத் திகழும் தாய்மார்களின் கடின உழைப்பும், தியாகங்களும் போற்றுதலுக்குரியது. நம் ஒவ்வொருவர் வாழ்விலும் தாய்மார்கள் வகிக்கும் முக்கியப் பங்கிற்கு நன்றி செலுத்துவோம். இனிய அன்னையர் தின வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

அன்புமணி:பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அன்னையர் தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், “தியாகத்தின் திருவிளக்கு அன்னையரே, அவர்களை எந்நாளும் போற்றுவோம்! உலகில் மெழுகுவர்த்திகளே வெட்கப்படும் அளவுக்கு ஈகங்களைச் செய்வர்கள் அன்னையர் தான். உயிர் கொடுத்தது மட்டுமின்றி உண்டி கொடுத்தது, ஊக்கம் கொடுத்தது, உயர்வு கொடுத்தது எல்லாமே அன்னையர் தான்.

தாம் பெற்ற வலிகளையும், வேதனைகளையும் தமது குழந்தைகள் பெறக்கூடாது, தாம் பெறாத பெருமைகளையும், உயர்வுகளையும், சிறப்புகளையும் தமது பிள்ளைகள் பெற வேண்டும் என்ற சிந்தனை அன்னையைத் தவிர எவருக்கும் வராது. எப்படிப் பார்த்தாலும் தியாகத்தின் திருவிளக்கு அவர்கள் தான். உலக அன்னையர் நாளில் அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம். அவர்களை மனதில் குடியமர்த்தி எந்நாளும் வணங்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய்:நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், “அன்பின் முழு உருவமாய் திகழ்ந்து, குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும், தம் வாழ்நாளையே தியாகம் செய்யும் தாய்மார்களுக்கு அன்னை தினத்தில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அன்னையரை இன்று மட்டுமில்ல, எந்நாளும் போற்றி வணங்குவோம்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:அதிமுகவில் இருந்து ஆரம்பித்த விஜய்.. எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து! - Vijay Bday Wishes To EPS

ABOUT THE AUTHOR

...view details