சென்னை:விக்கிரவாண்டி வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெற்ற தவெக முதல் மாநாட்டில், விஜய் திராவிட மாடல், பாசிசம் என பல்வேறு கருத்துக்களைப் பேசினார். இந்நிலையில், விஜய் மாநாடு பேச்சு குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தவெக தலைவர் விஜய், திமுகவுக்கு எதிராக பேசியது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், “திமுக என்பது ஆலமரம். காய்த்த மரம் தான் கல்லடி படும். இந்த ஆலமரத்தின் மீது கல்லடி பட்டாலும் தாங்கிக் கொள்ளும் சக்தி இருக்கிறது. யார் தாக்கி பேசினாலும் கவலைப்படுவதில்லை. திமுக தேம்ஸ் நதியைப் போன்றது” என கூறியுள்ளார்.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விஜய் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “தம்பி விஜய்க்கு வாழ்த்துக்கள். இரண்டரை மணி நேர படம் பார்த்தது போல் உள்ளது. விஜய் ஆரம்பம் முதலே பிரித்தாளும் அரசியல் செய்பவர்கள் எனது கொள்கைக்கு எதிரி என கூறியுள்ளார். நீங்கள் மத்திய அரசைப் பற்றி தெரியாமல், உங்கள் கொள்கை எதிரியை பாஜக என தேர்வு செய்யக் கூடாது” என தெரிவித்துள்ளார்.
ஐஜேகே நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் பேசுகையில், “மாநாட்டில் விஜய் ஆற்றிய உரை மெய்சிலிர்க்க வைத்தது. தன்னெழுச்சியாக மக்கள் கூட்டம் வந்ததையும் அவர்களது உணர்வையும் பார்க்க முடிந்தது. எந்த கட்சி தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டுமோ? அதை துணிவோடும், தெளிவோடும், வீரத்துடனும், விவேகத்துடனும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் விஜய்யின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.