தேனி:தமிழகத்தில் ரேஷனில் இலவசமாக வழங்கப்படும் அரிசிக்கு கேரளாவில் நல்ல விலை கிடைப்பதால், தேனி மாவட்டத்திலிருந்து டன் கணக்கில் ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இன்று கோடாங்கிபட்டி அருகே உள்ள திருச்செந்தூர் காலனி என்னும் பகுதியில் வீரலட்சுமி நகருக்கு பின்புறம் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் உள்ள குடோனில் டன் கணக்கில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பழனிச்செட்டிபட்டி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்த குடோனை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு தார்ப்பாயால் மூடப்பட்டு, தலா 50 கிலோ எடை கொண்ட சுமார் 200 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மேலும் அந்த அரிசி மூட்டைகளின் மேல் பகுதியில் "கொத்தமல்லி பொடி" என ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டு இருந்ததுடன் , கொத்தமல்லி பொடி என அச்சடிக்கப்பட்ட ஸ்டிக்கர்களும் முகவரியுடன் ஒட்டப்பட்டிருந்தன.
இதுகுறித்து உணவுப்பொருள் கடத்தல் பிரிவு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி தனியார் வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டு தேனியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கில் ஒப்படைக்கப்பட்டு அங்கு ரசீது பெறப்பட்டதுய
இதன் அடிப்படையில் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த கோடாங்கிபட்டியைச் சேர்ந்த பால்பாண்டி என்பவரை உணவுப் பொருள் கடத்தல் பிரிவு போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.